இனம், சமயம், வயது, குடியுரிமை, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாட்டுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு
வேலையிடத்துக்கு பாகுபாட்டுக்கு எதிராக வரையப்பட்ட வழிகாட்டிகளை சட்டமாக மாற்றும் நகல் மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் பற்றி கருத்துரைக்கலாம். வேலையிட நியாயமான நடைமுறை சட்டத்தின் நகல் மசோதாவை முத்தரப்புக் குழு நேற்று வெளியிட்டது.
இனம், மொழி, பாலினம், வயது போன்றவற்றின் அடிப் படையில் பாகுபாட்டிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் தவறுசெய்யும் முதலாளிகளுக்கு எதிராக புதிய தண்டனைகளும் அதில் முன்மொழியப்பட்டுள்ளன.
பாகுபாட்டுக்கு எதிரான நடைமுறைகள் சட்டங்களாக இயற்றப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் 2021 ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
மசோதா அடுத்த ஆண்டு பிற்பகுதியில் சட்டமாக இயற்றப்படலாம். அதில் நான்கு பரந்துபட்ட இலக்குகளை அடைய 20 பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இனம், மொழி, சமயம், பாலினம், குடியுரிமை, வயது, உடற் குறைபாடு, மனநலப் பிரச்சினைகள் போன்ற சார்புகளுக்கு எதிராக ஊழியர்களைப் பாதுகாப்பது நோக்கங்களில் ஒன்று.
வேலைக்கு அமர்த்துவது, பதவி உயர்வு தொடர்பான பாகுபாட்டுக்கும் ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது, சட்டத்தை மீறுவோருக்கு, குற்றங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதன் அடிப்படையில் பல்வேறு புதிய தண்டனைகளை முன்வைப்பது ஆகியவை மற்ற சில நோக்கங்களாகும்.
நியாயமற்ற வகையில் நடத்தப்படும் ஊழியர்களுக்கு உதவு வதில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தொடர்ந்து முன்னணி வகிக்கும் என்று கருதப்படுகிறது.
தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் நியாயம் கோரும் ஊழியர் களுக்கு இழப்பீடாக $30,000 வரை கிடைக்கலாம் என்றும் தொழிற்சங்கம் சாராதவர்களுக்கு அத்தொகை $20,000ஆக இருக்கும்.
இருப்பினும் நியாயம் கோரும் எல்லா மனுக்களும் சமரசப் பேச்சு கட்டாயமாக்கப்படும். பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியில் நடத்தப்படும் சமரசப் பேச்சின் வழி தீர்வுகாணப்படும்.
25க்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட சிறிய நிறுவனங்கள் சட்டத்திலிருந்து ஐந்தாண்டுகள் விலக்கு பெறவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் சட்டத்தைப் புரிந்துகொள்ள அவகாசம் தருவது அதன் நோக்கம்.
பாகுபாட்டின் தொடர்பில் கடந்த 2018 முதல் 2021 வரை கிடைத்த புகார்களில் இரண்டில் ஒன்று, சொந்த நாட்டவர்க்கு சாதகமாக நடந்துகொண்டதன் தொடர்பிலானவை என்று மனிதவள அமைச்சு கூறியது.
அதே காலகட்டத்தில் வேலை தேடியபோது பாகுபாட்டை எதிர்நோக்கியதாகக் கூறியவர்களின் விகிதம் 43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகக் குறைந்தது.
"எனினும், வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம்," என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று கூறினார்.
"வேலையிடத்தில் நியாயம் காக்க வலுவான, உறுதிமிக்க நடைமுறை இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கூடுதல் நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம்," என்றார் டாக்டர் டான். முத்தரப்புக் குழுவுக்கு அவர் தலைமை தாங்குகிறார்.
அதேநேரம், புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது தற்போது நடப்பில் உள்ள நியாயமான வேலை நடைமுறை தொடர்பான, விரிவான முத்தரப்பு வழிகாட்டிகளுக்கு மாற்றாக இருக்காது என்று டாக்டர் டான் விளக்கினார்.
அளவுக்கு அதிகமாக விரிவாகவும், முதலாளிகள், ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் ஆகியோர் தங்களுக்கு ஏற்ப அவற்றை விளங்கிக்கொள்ளும் வகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டால், அதிகமான கருத்துவேறுபாடு கள் ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

