சிங்கப்பூர் பொருளியல் கடந்த ஆண்டு 3.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஜனவரியில் வெளியிடப்பட்ட 3.8 விழுக்காடு முன்னோடி மதிப்பீட்டைவிட சற்று குறைவாகும். வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவித்தன.
பொருளியல் இவ்வாண்டு 0.5 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்ற முன்னுரைப்பை வர்த்தக, தொழில் அமைச்சு இப்போதைக்கு மாற்றவில்லை.
சீனா அதன் எல்லைகளை எதிர்பார்த்ததைவிட விரைவில் திறந்துவிட்டது விமானத் துறை, பயணத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவக்கூடும். ஆனால் உலகளவில் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியும் பெரிய அளவில் இருக்காது என்று கருதப்படுகிறது.
2021இன் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நாலாம் காலாண்டில், பொருளியல் 2.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இது வர்த்தக, தொழில் அமைச்சின் முந்தைய 2.2 விழுக்காடு முன்னுரைப்பைவிடவும் புளூம்பெர்க் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்த 2.3 விழுக்காடு வளர்ச்சியைவிடவும் சற்று குறைவு. காலாண்டுக்கு காலாண்டு எனும் அடிப்படையில், மூன்றாம் காலாண்டைவிட நான்காம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 0.1 விழுக்காடு மட்டுமே கூடியது.
ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு, சிங்கப்பூர் கண்ட பொருளியல் வளர்ச்சியின் விகிதத்தை அமைச்சு உயர்த்தியது. 2021ல் சிங்கப்பூர் பொருளியல் 7.6 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகக் கூறப்பட்ட நிலையில் உண்மையில் அந்த விகிதம் 8.9 விழுக்காடு என்று அமைச்சு கூறியது. துறைவாரியாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் உட்பட, புதிய தகவல்களும் ஏற்கெனவே உள்ள தகவல்களில் செய்யப்பட்ட திருத்தங்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஒட்டுமொத்த வர்த்தகம், உற்பத்தித் துறை, இதர சேவைகள் போன்றவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியே கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சிக்கு வேறு காரணிகள் இருக்கும். உலகளவில் விமானப் பயணங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளதால் விமானப் போக்கு வரத்து, விண்வெளி (ஏரோஸ்பேஸ்) துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்படலாம். குடியிருப்பு, பொழுதுபோக்கு போன்ற உள்நாட்டுத் துறைகள் மேம்பாடு கண்டு பொருளியலுக்குக் கூடுதல் பங்களிக்கலாம்.
"சென்ற நவம்பரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்துக்குப் பின்னர், வெளிநாட்டுத் தேவை குறித்த 2023ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்பு சற்று மேம்பட்டுள்ளது," என்று வர்த்தக, தொழில் அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் கேப்ரியல் லிம் கூறினார். குறிப்பாக, சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் எதிர்பார்த்ததைவிட வேகமாகத் தளர்த்தப்படுவதால், அந்நாட்டில் பொருளியல் வளர்ச்சி வேகம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதனால் மற்ற ஆசியப் பொருளியல்களுக்கான வளர்ச்சி எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளியல்கள் வலுகுறைந்து உள்ளதாகக் கூறினார் திரு லிம்.
அதேநேரம் உலகப் பொருளியலில் குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்றார் அவர்.
வட்டி விகித உயர்வால் ஏற்படும் தாக்கம், உக்ரேன் போர் மோசடைவது, வல்லரசுகளுக்கு இடையே பதற்றம் கூடும் அபாயம் அவற்றில் அடங்கும்.

