முதல் முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளை வாங்கும் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி கிடைக்க உள்ளது.
நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடுகளை வாங்கும் குடும்பங்களுக்கு கூடுதலாக $30,000 வீடமைப்பு மானியம் கிடைக்கும். ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுகளை வாங்குவோருக்கு மேலும் $10,000 வழங்கப்படும்.
அத்துடன், முதல் வீட்டை வாங்கும் இளம் பிள்ளைகள் உள்ள குடும்பங்களும் திருமணமான 40 வயதும் அதற்கும் குறைந்த வயதுடைய இளம் தம்பதியரும் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீட்டு (பிடிஓ) திட்டத்தின்கீழ் மேலும் ஒரு குலுக்கல் வாய்ப்பைப் பெறுவர்.
வீட்டுரிமை தொடர்பான இளம் சிங்கப்பூரர்களின் குறிக்கோளுக்கு இத்திட்டங்கள் ஆதரவாக அமையும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து பேசியபோது கூறினார்.
மாற்றியமைக்கப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத் திட்டத்தின்கீழ் ஈரறை, மூவறை அல்லது நான்கறை வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்கும் குடும்பங்களுக்கான மானியம் $50,000 இலிருந்து $80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுகளை வாங்குவோருக்கான மானியம் $40,000லிருந்து $50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மானியத் திட்டத்திற்குத் தகுதி பெற, குடும்பத்தில் குறைந்தது இரண்டு சிங்கப்பூரர்கள் அல்லது ஒரு சிங்கப்பூரர், ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி இருக்க வேண்டும்.
அத்துடன் இதற்குமுன் வீடமைப்பு தொடர்பான நிதி உதவியை அவர்கள் பெற்றிருக்கக்கூடாது. மாத வருமானம் $14,000க்கு மேல் இருக்கக்கூடாது. அதோடு வீட்டு விண்ணப்பத்திற்கு 30 மாதங்களுக்கு முன்னர் தனியார் சொத்து உரிமையாளராக இருந்திருக்கக்கூடாது.
முதல்முறை வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்கும் ஒற்றையர்களுக்கும் கூடுதல் மத்திய சேம நிதி வீடமைப்பு மானியங்கள் வழங்கப்படவுள்ளது. நான்கறை மற்றும் அதற்கும் சிறிய வீடுகளை வாங்குவோருக்கு $25,000லிருந்து $40,000 மானியமும் ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுவாங்குவோருக்கு $20,000லிருந்து $25,000 மானியமும் வழங்கப்படும்.
முதல் முறை வீடு வாங்கும் ஒற்றையர் திட்டத்திற்கு தகுதிபெற இதற்கு முன்னர் எந்த மானியமும் பெற்றிராத, 35 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரராக இருக்கவேண்டும். மாத வருமானம் $7,000க்கு மேல் இருக்கக்கூடாது. வீட்டு விண்ணப்பத்திற்கு 30 மாதங்களுக்கு முன்னர் தனியார் சொத்து உரிமையாளராகவோ இருந்திருக்கக்கூடாது.
மறுவிற்பனை வீட்டு விண்ணப்பங்களை நேற்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து சமர்ப்பித்தோர் இந்த அதிகரிக்கப்பட்ட மானியத் தொகைக்குத் தகுதிபெறலாம்.
மேலும், வீவக மறுவிற்பனை வீடுகளை மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத் திட்டத்தின்கீழ் முதல் முறை வாங்கும் குடும்பங்கள் $80,000 மானியமும் ஒற்றையர்கள் $40,000 மானியமும் பெறலாம்.
நெருக்கம் ஊக்குவிக்கும் (உடனடி குடும்ப உறுப்பினர்களுடன்) வீட்டு மானியத்தின்கீழ் குடும்பங்கள் $30,000 தொகையையும் ஒற்றையர்கள் $15,000 தொகையையும் கோரலாம்.
எனவே, மறுவிற்பனை வீட்டை முதல் முறை வாங்கும் குடும்பங்கள் $190,000 வரையிலும் முதல் முறை வாங்கும் ஒற்றையர்கள் $95,000 வரையிலும் மானியம் பெறக்கூடும்.
தற்போது, பிடிஓ விநியோகத்தின் பெரும்பகுதி, முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத குடியிருப்புப் பேட்டைகளில் நான்கு அறைகள் மற்றும் அதற்கும் பெரிய வீடுகளில் குறைந்தது 95 விழுக்காடு முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், முதல் முறை வீடு வாங்குவோர் பிரிவு பரவலானது. ஏற்கெனவே சொந்த வீடு உள்ளவர்கள் ஆனால், இதற்கு முன் வீட்டு மானியம் பெறாதவர்களும் முதல் முறை வாங்குவோராகக் கருதப்படுவர் என்று திரு வோங் சுட்டினார்.
"எனவே, குறிப்பிட்ட பிரிவினரை அடையாளம் கண்டு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
எனவே, பிள்ளைகள் உள்ள, முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களும் 40 வயதும் அதற்குக் குறைவான வயதுமுடைய இளம் திருமணமான தம்பதிகளும் தங்கள் முதல் வீட்டை வாங்க உதவி அளிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் வரவுசெலவுத் திட்ட செய்திகள் - பக்கம் 2, 3

