மத்திய சேம நிதிக் கழகம், 1948க்கு முன்னர் பிறந்த ஏறக்குறைய 85,000 பேர் இனி மாத வழங்குதொகையைப் பெறுவர் என்று தெரிவித்துள்ளது.
அவர்கள் இந்தத் தெரிவை இதற்கு முன்னர் தேர்ந்தெடுக்காவிட்டாலும் இதற்குத் தகுதிபெறுவர். இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு இதுகுறித்துத் தகவல் அனுப்பப்படும்.
தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் அவரவர் பிறந்த மாதம் தொடங்கி வழங்குதொகையை அவர்கள் பெற்றுக்கொள்வர் என்று கழகம் நேற்றுக் கூறியது.
1948ஆம் ஆண்டிலோ அதற்குப் பிறகோ பிறந்த கழக உறுப்பினர்கள் வழங்குதொகைக்கு விண்ணப்பிக்காமலே அதற்குத் தகுதிபெறும் முறை 2018ல் நடப்புக்கு வந்தது. இதுகுறித்து ஆக்ககரமான கருத்துகள் பெறப்பட்டதாகக் கழகம் கூறியது.
அதற்கு முன்னர் உறுப்பினர்கள் பலரும் 65 வயதுக்குப் பிறகு வழங்குதொகையைப் பெற்றுக்கொள்வதாக கழகத்திடம் தெரிவிக்கும் நடைமுறையை அலட்சியப்படுத்தியதாக அது குறிப்பிட்டது.
மேலும், 'சிபிஎஃப் லைஃப்' திட்டத்தின்கீழ் 7,000 உறுப்பினர்கள், சாதாரண, சிறப்புக் கணக்குகளில் இருந்து மொத்தமாக ரொக்கம் எடுக்க இயலாத நிலையில் இருந்தால், கூடுதல் மாத வழங்குதொகையைப் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், ஓய்வுக்கால நிதித் திட்ட உறுப்பினர்களின் குறைந்தபட்ச மாத வழங்குதொகை $350ஆக உயர்த்தப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
இதன்மூலம் வரும் ஜூன் மாதத்திலிருந்து ஏறத்தாழ 112,000 பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

