மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு: 2022ல் கஞ்சா பறிமுதல் அதிகரிப்பு
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிதாக கஞ்சா பயன்படுத்தத் தொடங்கிய 30க்குக் குறைவான வயதுடையோரின் எண்ணிக்கையும் 2022ல் கூடியது.
இந்தப் போக்கு கவலைஅளிப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியிருக்கிறது.
இங்கு 'ஐஸ்' போதைப்பொருள் பரவாலக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அதன் ஆண்டுப் புள்ளிவிவர அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற ஆண்டு கஞ்சா பயன்படுத்தியதற்காகப் பிடிபட்டோர் எண்ணிக்கை 71 விழுக்காடு உயர்ந்தது. 2021ல் 138 பேர் இதன் தொடர்பில் பிடிபட்டனர். சென்ற ஆண்டு பிடிபட்டோரின் எண்ணிக்கை 236.
சென்ற ஆண்டு 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்தியதன் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.4 விழுக்காடு குறைந்ததாகக் கூறப்பட்டது. சென்ற ஆண்டு மொத்தம் 1,445 பேர் இதற்காகப் பிடிபட்டனர். 2021ஆம் ஆண்டில் பிடிபட்டோர் எண்ணிக்கை 1,595.
கஞ்சா பயன்படுத்தும் இளையர்களில் பலர் புதிதாக அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டது. சென்ற ஆண்டு இதன் தொடர்பில் கைதானோரில் 70 விழுக்காட்டினர் 30 வயதுக்குக் குறைவான வயதுடையோர். அவர்களில் 14 வயதுச் சிறுவனும் அடங்குவான்.
உலகளவில் போதைப்பொருள்கள் தொடர்பான கடுமையான கொள்கைகள் தளர்த்தப்படும் வேளையில் சிங்கப்பூரில் கஞ்சா பயன்படுத்தும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு கவலை அளிப்பதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டதை அது சுட்டியது.
உலகெங்கும் கஞ்சாதான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருள் என்று அது குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு போதைப்பொருள் புழக்கத்திற்காகக் கைது செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகரித்து 2,812 ஆனதாக நேற்று வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2021ல் இந்த எண்ணிக்கை குறைந்திருந்தது. கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் விதிக்கப்பட்ட சமூகத் தொடர்புக் கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் குறையவில்லை. கிருமிப் பரவலின்போதும் சிங்கப்பூருக்குள் போதைப்பொருள்களைக் கொண்டுவருவதற்குப் புதிய உத்திகளைக் கடத்தல்காரர்கள் பயன்படுத்தினர் என்று அறிக்கை குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு 133.25 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2021ல் 107.08 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர்.
2022ல் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $14.04 மில்லியன் என்று கூறப்பட்டது.

