தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) நேற்று சோதனை நடத்தினர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்பட ஐந்து இடங்களில் சோதனை நடந்தது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணையில் முபின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் செயல்பட்டதாகவும் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டது.
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக நேற்றைய சோதனை நடைபெற்றதாகத் தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 60க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடையதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவற்றின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.
சில நாள்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன் உள்ளிட்ட ஏழு பேரை என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்தனர். அதில் கிடைத்த ஆதாரங்கள், காணொளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நேற்றைய சோதனை நடந்ததாகத் தெரிகிறது.
நேற்றைய சோதனையில், கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடந்தது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளில் நேற்றுக் காலை 6 மணி முதல் 16 அதிகாரிகள் கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டது. சோதனையின்போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
பொள்ளாச்சியில் சையது ரகுமான் என்பவரது வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் முகமது ஃபைசல் என்பவர் வீட்டிலும் டவுன் கரிக்காத்தோப்பைச் சேர்ந்த அன்வர்தீன், ஏர்வாடி கட்டளைத் தெருவைச் சேர்ந்த கமாலுதீன் ஆகியோர் வீடுகளிலும் காயல்பட்டினத்தில் ஆரீஸ் என்பவர் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய மூவர் சிக்கியதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில வாரங்களில், கர்நாடக மாநிலம் மங்களூரிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது.
இதுகுறித்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

