நியூசிலாந்தை கேப்ரியேல் புயல் புரட்டிப்போட்டதை அடுத்து, அங்கு இதுவரை ஐந்து பேர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், அந்நாட்டில் மீண்டும் புயல் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரித்தனர்.
கேப்ரியேல் புயலால் ஏற்கெனவே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் புயல் சூறையாடக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
நியூசிலாந்தின் கிழக்குப் பகுதி புயல் காரணமாக நிலைகுலைந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த சில நாள்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்ரியேல் புயல் காரணமாகப் பல சாலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.
அதுமட்டுமல்லாது, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கனமழை, வெள்ளம் காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
நியூசிலாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடக்குத் திசையிலிருந்து கேப்ரியேல் புயல் அண்மையில் கரையைக் கடந்தது.
இதனால் வெள்ளம் கரைபுரண்டோட, பாதிக்கப்பட்ட இடங்களில் பலரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 3,500 பேரைக் காணவில்லை என்றும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது அன்புக்குரியவர்கள் தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை அடுத்து, கூரை மீது நின்றுகொண்டு பலர் உதவிக்குக் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வெள்ளம் காரணமாக பாலம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து, நேப்பியர் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
படம்: ஏஎஃப்பி

