இந்தியாவிலிருந்து உலகின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவை வழங்க இலக்கு
ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கவிருக்கும் 470 விமானங்களை இயக்க 6,500க்கும் அதிகமான விமானிகள் தேவைப்படலாம் என்று விமானத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுடனான அந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 7-8 ஆண்டுகளில் அவ்விமானங்கள் ஏர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிலிருந்து உலகின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவை வழங்கும் வகையில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகிறது.
அவ்வகையில், 250 ஏர்பஸ், 220 போயிங் விமானங்களை வாங்க அண்மையில் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்நிலையில், தேவையின் அடிப்படையில் கூடுதலாக 370 விமானங்களை வாங்கிக்கொள்ளும் வகையில், அந்த ஒப்பந்தம் மொத்தம் 840 விமானங்களுக்கானது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இவ்வளவு விமானங்களை ஏர் இந்தியா வாங்கும் நிலையில், அவற்றை இயக்க அதிகமான விமானிகள் தேவைப்படுவர்.
இப்போது 113 விமானங்களை இயக்கிவரும் ஏர் இந்தியா ஏறக்குறைய 1,600 விமானிகளைக் கொண்டுள்ளது. அதன் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்ஏஷியா இந்தியாவிலும் சேர்த்து கிட்டத்தட்ட 850 விமானிகள் உள்ளனர்.
ஏர் இந்தியா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாராவில் 600க்கும் மேற்பட்ட விமானிகள் இருக்கின்றனர்.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர்ஏஷியா இந்தியா எல்லாம் சேர்த்து மொத்தம் 220 விமானங்களை இயக்க ஏறத்தாழ 3,000 விமானிகளைக் கொண்டுள்ளன.
இதனிடையே, அகன்ற உடல் அமைப்பு கொண்ட ஒரு ஏ350 விமானத்திற்கு 30 விமானிகள் என்ற கணக்கில், 40 விமானங்களுக்கு 1,200 பேர் தேவைப்படுவர். அதுபோல, ஒரு போயிங் 777 விமானத்திற்கு 26 விமானிகளும் ஒரு போயிங் 787 விமானத்திற்கு 20 விமானிகளும் தேவை எனச் சொல்லப்படுகிறது. அவ்வகையில், மொத்தம் 30 விமானங்களுக்கு 660 விமானிகள் தேவைப்படுவர்.
அதுபோல, குறுகிய உடல் அமைப்பு கொண்ட ஏர்பஸ் ஏ320 அல்லது போயிங் 737 மேக்ஸ் விமானம் ஒன்றுக்கு 12 விமானிகள் தேவை என்ற கணக்கில், அத்தகைய 400 விமானங்களுக்குக் குறைந்தது 4,800 விமானிகள் தேவைப்படலாம்.