இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின்படி தங்களுக்கு எவ்வளவு வழங்குதொகை, தள்ளுபடி கிடைக்கும் என்பதைச் சிங்கப்பூரர்களே மதிப்பிட்டுக்கொள்ளலாம்.
புதிய இணையக் கணிப்பான் மூலம் இது சாத்தியமாகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அவ்வறிக்கையில் பல ஆதரவுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதால், தாங்கள் தகுதிபெறும் அனுகூலங்களைக் கணிப்பது பலருக்கும் எளிதாக இராது என்று திரு வோங், தமது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக உலக அளவில் பரவலாக கவனம் பெற்றுவரும் `சாட்ஜிபிடி' எனும் இணையவழி செயற்கை நுண்ணறிவுத்தளமும் மிகத் துல்லியமான மதிப்பீட்டைத் தர இயலாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்தில்கொண்டு, அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்) மற்றும் நிதியமைச்சைச் சேர்ந்த குழுக்கள் இணைந்து ஓர் இணையக் கணிப்பானை உருவாக்கியிருக்கின்றன.
அதனைப் பயன்படுத்தி, தனிநபர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு ஆதரவுத் தொகுப்புகள், திட்டங்கள் மூலம் தாங்கள் பெறக்கூடிய பலன்களை மதிப்பிடலாம் என்று துணைப் பிரதமர் கூறியிருக்கிறார்.
உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் நடப்பிலுள்ள வழங்குதொகைகளும் திட்டங்களும் 2023 வரவுசெலவுத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டிற்கென புதிய சிறப்பு வழங்குதொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருள், சேவை வரி உயர்வு குடும்பங்களில் ஏற்படுத்தக்கூடும் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு, உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் மதிப்பு $6.6 பில்லியனில் இருந்து $9.6 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் பின்வரும் இணைய முகவரியில் கணிப்பானுக்குச் செல்லலாம்: http://go.gov.sg/supportforyoucalculator.

