'சிங்கப்பூர் மிகவும் சிறப்பாக செயல்பட்டது'

'சிங்கப்பூர் மிகவும் சிறப்பாக செயல்பட்டது'

2 mins read

கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட முறை குறித்து வல்லுநர்கள்

உல­கெங்­கும் கடந்த மூன்று ஆண்டு­களில் கடு­மை­யான பாதிப்பை ஏற்­படுத்­தி­யது கொவிட்-19 கிரு­மிப் பர­வல். கிட்­டத்­தட்ட 6.84 மில்­லி­யன் பேர் இதற்­கு பலி­யா­னார்­கள்.

நிலைமை படிப்­ப­டி­யாக மேம்­பட்டு இப்­போது சிங்­கப்­பூ­ரின் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் முகக்கவ­சம் அணி­யத் தேவை­யில்லை என்ற அள­விற்­குக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் கிரு­மிப் பர­வ­லைக் கையாண்ட முறை குறித்து விரை­வில் அர­சாங்­கம் விரி­வான அறிக்­கையை வெளி­யி­டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் இம்­மா­தம் 9ஆம் தேதி தெரி­வித்­தி­ருந்­தார்.

இவ்­வே­ளை­யில் கொவிட்-19க்கு எதி­ரான போரில் துணை­நின்ற வல்லு நர்­கள் சில­ரி­டம் கருத்­த­றிந்­தது ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ். சிங்­கப்­பூர் எந்த நடை­மு­றை­களில் சிறப்­பா­கச் செய்­தது, எதில் இன்­னும் மேம்­பட்ட வகை­யில் செயல்­பட்­டி­ருக்­க­லாம் என்று கேட்­ட­றிந்­தது.

கருத்­து­ரைத்த 11 வல்­லு­நர்­களில் ஆறு பேர், சிங்­கப்­பூ­ருக்கு 'ஏ' தர நிலை­யைத் தந்­த­னர். மேலும் மூன்று பேர் 'ஏ-' தர­நி­லை­யை­யும் இரு­வர் 'பி+' தர­நி­லை­யை­யும் வழங்­கி­னர்.

கிரு­மிப் பர­வ­லால் ஏற்­பட்ட மிரட்­டலை விரைந்து உணர்ந்­தது, அர­சாங்­கத்­தின் அனைத்­துத் துறை­க­ளை­யும் உள்­ள­டக்­கிய எதிர்­கொள்­ள­லுக்கு உட­னடி நட­வ­டிக்­கை­கள் எடுத்­தது ஆகிய இரண்டு அம்­சங்­களும் சிங்­கப்­பூ­ரின் சிறப்­பான செயல்­பாடு தொடர்­பான பட்­டி­ய­லில் முன்­னிலை வகிக்­கின்­றன.

கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிப்­ப­தற்­கான அமைச்­சு­கள்நிலைப் பணிக்­குழு அமைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே சிங்­கப்­பூர் கவ­னத்­து­டன் செயல்­ப­டத் தொடங்கி­விட்­டது.

தொடர்­புத் தடம் அறி­தல், தனி­மைப்­ப­டுத்­தல், தங்­கும் இடத்தை விட்டு வெளி­யே­று­வ­தற்­கான தடை ஆகிய நட­வ­டிக்­கை­க­ளால், தடுப்­பூ­சியோ சிகிச்­சையோ இல்­லாத கால­கட்­டத்­தில் கிரு­மித்­தொற்று அதி­கம் பர­வா­மல் தடுக்க முடிந்­ததை வல்­லு­நர்­கள் சுட்­டி­னர்.

அதிக விலை கொடுத்­தா­வது முன்­கூட்­டியே தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்த சிங்­கப்­பூ­ரின் தொலைநோக்­கை­யும் பெரிய அள­வி­லான தடுப்­பூ­சித் திட்­டத்­தை­யும் அவர்­கள் பாராட்­டி­னர்.

நிறு­வ­னங்­களும் குடும்­பங்­களும் பொரு­ளி­யல் இடை­யூ­று­க­ளைச் சமா­ளிக்க அர­சாங்­கம் வழங்­கிய ஆத­ர­வுத் திட்­டங்­களை வல்­லு­நர்­கள் குறிப்­பிட்­ட­னர். சமூ­கத்­தின் ஆத­ர­வும் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கப் பெரி­தும் உத­வி­யதை அவர்­கள் சுட்­டி­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் கிரு­மிப் பர­வலை மேம்­பட்ட முறை­யில் கையாண்­டி­ருக்­க­லாம் என்­பது அனைத்து வல்­லு­நர்­க­ளின் கருத்து.

தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­னரை கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் சிங்­கப்­பூர் மெது­வா­கவே இணைத்­த­தை­யும் அவர்­க­ளுக்­குத் தேவை­யான மருத்­து­வக் கரு­வி­கள் மெது­வா­கவே வழங்­கப்­பட்­டன என்­ப­தை­யும் வல்­லு­நர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், சிங்­கப்­பூர் கொவிட்-19 தொடர்­பான மரணங்களைக் கட்­டுப்­ப­டுத்­தி­யதால் சிறப்­பான தர­நி­லையை வழங்­க­லாம்.

பொரு­ளி­யல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள், சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு செய­லி­ழக்காமல் காத்தது போன்ற அம்­சங்­க­ளில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இருப்பினும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் கிருமிப் பரவல் மோசமடைந்தது உள்ளிட்ட சில காரணங்களால் 'ஏ+' தர நிலையை வழங்க இயலவில்லை என்று வல்லுநர்கள் கூறினர்.