அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனாவின் மூத்த அரசதந்திரியான வாங் யியை, ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற உலகப் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கிடையே சந்தித்தார்.
சீனாவிற்காக உளவு வேலை பார்ப்பதாகச் சந்தேகித்து பலூன் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது தொடர்பான சர்ச்சை குறித்து வாஷிங்டனின் நடவடிக்கை மிரட்சியில் பாதிக்கப்பட்டவரைப் போன்று உள்ளது என்று கருத்தரங்கில் திரு வாங் யி சாடிய சில மணி நேரத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இருப்பினும், இரு தலைவர்களும் எங்கு சந்தித்தனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது, உக்ரேன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவிற்கு சீனா உதவிக்கரம் நீட்டினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திரு பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோவிற்கு பெய்ஜிங் ஆயுதங்களை வழங்கக்கூடும் என்பது வாஷிங்டனின் கவலை. சந்திப்பில் தாம் திரு வாங் யியிடம் விடுத்த எச்சரிக்கை குறித்து அமைச்சர் பிளிங்கன் 'என்பிசி நியூஸ்' செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ரஷ்யா உக்ரேன்மீது போர் தொடுப்பதற்கு முன்னர் சீனாவும் ரஷ்யாவும் எல்லையற்ற பங்காளித்துவம் தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்தப் போரை பெய்ஜிங் கண்டிக்கவோ இதை படையெடுப்பு என்று வகைப்படுத்தவோ இல்லை.
ஆனால் கருத்தரங்கில் பேசியபோது திரு வாங் யி, ஐரோப்பிய நாடுகள் இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமைதியாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் இம்மாதம் 5, 6ஆம் தேதிகளில் பெய்ஜிங்கிற்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அவரது பயணம் தள்ளிப் போடப்பட்டது.

