ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் சென்ற மாதம் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் சீனா கிருமிப் பரவலுக்குப் பிறகு மீண்டும் அதன் எல்லைகளைத் திறந்துள்ளதும் இதற்குக் காரணங்கள்.
சென்ற மாதம் 2.1 மில்லியன் பேர் ஹாங்காங் விமான நிலையத்திற்கு வந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்புநோக்க, இது 2,900 விழுக்காடு அதிகம்.
தென்கிழக்காசிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான விமானப் பயணங்கள் கணிசமான அளவு அதிகரித்ததாக விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட செய்தியாளர் குறிப்பு தெரிவிக்கிறது.
சீனா அதன் எல்லைகளைத் திறந்த வேளையில், சீனப் புத்தாண்டு விடுமுறையை ஒட்டிப் பலரும் பயணம் செய்ததால் சென்ற மாதம் பயணிகள் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றை முன்னிட்டு நீண்ட நாள்களாக எல்லைகள் மூடப்பட்டிருந்ததால் ஹாங்காங்கின் பொருளியல் வெகுவாக பாதிக்கப்பட்டது.
சீனாவிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்த்துவந்த நிலையில் எல்லைகள் மூடப்பட்டதால் ஹாங்காங்கின் சுற்றுப்பயணத் துறையும் வீழ்ச்சி கண்டது. நிலைமை இப்போது மேம்பட்டுள்ளதால், உலகப் பொருளியல் மையம், சீனாவிற்கான நுழைவாயில் எனும் நிலைப்பாடுகளை மீட்டெடுக்க முயல்கிறது ஹாங்காங்.
சீனா அதன் கொவிட்-19 அறவே இல்லாத நிலை எனும் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, ஹாங்காங் கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை விரைந்து அகற்றி வருகிறது.
கட்டாயமாக முகக்கவசம் அணிதல் எனும் கட்டுப்பாட்டைத் தவிர அந்நகரம் கிட்டத்தட்ட வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
இருப்பினும் சுற்றுப் பயணிகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் இன்னும் நடப்பில் உள்ளன. சீனாவிலிருந்து ஹாங்காங் செல்வதற்கான அனுமதி அன்றாடம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படுகிறது.
சுற்றுப் பயணத்துறையை மீட்டெடுக்க, அதிகாரிகள் ஓர் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதன்கீழ், இந்த ஆண்டு 500,000க்கு மேற்பட்ட இலவச விமானச் சீட்டுகள் வழங்கப்படும்.
ஹாங்காங் விமான நிலைய ஆணையம் இந்த விமானச் சீட்டுகளை 2020ஆம் ஆண்டு வாங்கியது.
விமானப் போக்குவரத்துத் துறையை மீட்டெடுக்கும் இரண்டு பில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்புள்ள நிவாரணத் திட்டத்தின்கீழ் இந்தப் பயணச் சீட்டுகள் வாங்கப்பட்டன. இது $340 மில்லியனுக்குச் சமம்.
கிருமிப் பரவலுக்கு முன்னர் ஆசியாவின் ஆகப் பரபரப்பான அனைத்துலக விமான நிலையமாக விளங்கியது ஹாங்காங் விமான நிலையம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் சென்ற மாத விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாலில் ஒரு பங்கு மட்டுமே.

