சிங்கப்பூரில் புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைச் சந்தை கடந்த ஆண்டு சாதகமாக அமைந்தது.
புதிய பட்டதாரிகள் பெரும்பாலானோருக்கு 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு முழுநேர வேலையுடன் கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டதாக பட்டதாரி வேலைநியமனம் தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழலிலிருந்து பொருளியல் தொடர்ந்து மீண்டுவருவதுடன் வளர்ச்சியும் கண்டு வரும் நிலையில் இந்த முன்னேற்றம் தெரிவதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, 2021ஆம் ஆண்டில் ஊழியரணியில் முழுநேர நிரந்தரப் பொறுப்புகளை ஏற்ற புதிய பட்டதாரிகள் 84 விழுக்காட்டினர் என்றும் 2022ல் இணைந்த புதிய பட்டதாரிகள் 87.5 விழுக்காட்டினர் என்றும் கண்டறியப்பட்டது.
மேலும், 2021ஆம் ஆண்டில் முழுநேர நிரந்தர வேலையில் அமர்த்தப்பட்ட புதிய பட்டதாரிகளுக்கான சராசரி மொத்த சம்பளம் மாதத்திற்கு $3,800 ஆக இருந்தது என்றும் கடந்த ஆண்டு அது $4,200ஆக உயர்ந்தது என்றும் 'கூட்டுத் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரி வேலைநியமன ஆய்வு 2022' கண்டறிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2022ல் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 93.8 விழுக்காட்டினருக்கு பட்டம் பெற்ற ஆறுமாதக் காலத்திற்குள் நிரந்தர, தன்னுரிமை அல்லது பகுதிநேர வேலைகள் கிடைத்துவிட்டது என்றும் கூறப்பட்டது.
இருப்பினும் 2021ல் இருந்த 94.4 விழுக்காட்டைக் காட்டிலும் இது சற்று குறைவு.
பகுதிநேர அல்லது தற்காலிக வேலையில் சேர்ந்த பட்டதாரிகள் 2021ல் 8.7 விழுக்காடாக இருந்து கடந்த ஆண்டு 4.5 விழுக்காடாகக் குறைந்திருந்தது.
சிங்கப்பூர் அதன் ஆக மோசமான பொருளியல் மந்தநிலையைச் சந்தித்த 2020ல் இந்த விகிதம் 22.3 விழுக்காடாக இருந்தது.
இருப்பினும் வேலையின்மை விகிதம் 2021ல் இருந்ததைக் காட்டிலும் 2022ல் சற்று உயர்ந்திருந்தது. புதிய பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 2021ல் 5.6 விழுக்காடாகவும் 2022ல் 6.2 விழுக்காடாகவும் இருந்தது.
தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், சுகாதார அறிவியல்கள், பொறியியல் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகள் அதிகமானோர் முழுநேர, நிரந்தர வேலையைக் கைப்பற்றினர் என்றும் கூறப்பட்டது.
குறிப்பாக, தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறைகளில் பயின்ற பட்டதாரிகள் மற்ற துறை பட்டதாரிகளுடன் ஒப்பிடுகையில் அதிகபட்ச சம்பளமான $5,625ஐக் கடந்தாண்டு பெற்றனர். 2021ல் அவர்களின் மாதச் சம்பளம் $5,000ஆக இருந்தது.
அண்மையில் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஊழியர்கள் பலர் தங்களின் வேலையை இழந்தபோதும் தொடர்ந்து தொழில்நுட்பத் துறை சார்ந்த பட்டதாரிகளுக்கான தேவை இன்னும் உள்ளது என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பம் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வரும் நிலையில் அத்துறை சார்ந்த பட்டதாரிகள் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மையைப் பின்பற்றுவதுடன் தங்களின் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஏறத்தாழ 12,100 முழுநேரப் பட்டதாரிகள் இந்த 2022 ஆய்வில் பங்கேற்றனர்.
இவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று தங்களின் வேலைநியமனத் தகுதியைத் தெரிவித்ததன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வேலைநியமனம் தொடர்பாக வெளியான இப்புள்ளிவிவரங்கள் சிங்கப்பூரின் மீள்திறனுக்குச் சான்றாக விளங்குகிறது என்று வேலைநியமன நிபுணர்கள் கூறியுள்ளனர்.

