பிரேசிலின் தென்கிழக்குக் கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணத்தால் வெள்ளத்துடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதனால் அந்நாட்டில் 36 பேர் உயிர் இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று சாவ் பாலோ மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரைத் தேடிவருவதுடன் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்டோரைக் கண்டுபிடிக்கவும் சாலைகளைத் திறக்கவும் முயன்று வருகின்றனர்.
பிரேசிலின் கார்னிவல் திருவிழாக் கொண்டாட்டங்களைக் காண்பதற்காக சுற்றுப்பயணிகள் பலர் வந்து குவிந்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்துள்ளது.
இதற்கிடையே, சாவ் பாலோவின் கரையோரப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை முன்னுரைப்புகள் கூறுகின்றன.
இதனால் குடிமைத் தற்காப்பு, தீயணைப்புப் பிரிவுகளைச் சேர்ந்த மீட்புப் பணிக்குழுக்களுக்குப் பெரும் சோதனை காத்திருக்கிறது என்றும் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

