பதின்ம வயது இளையர் இருவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு வயது 15. சிங்கப்பூரில் இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோரில் ஆக இளையவர் அவர்தான்.
உயர்நிலை மூன்று மாணவரான சுயதீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சிங்கப்பூரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். முஸ்லிம் அல்லாதோரின் தலைகளைத் துண்டிப்பது அவரது திட்டம்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, 16 வயதாகும் உயர்நிலை நான்கு மாணவருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்விரு இளையர்களையும் சேர்த்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட 21 வயதுக்குக் குறைவானோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. இந்தப் போக்கு கவலையளிப்பதாக உள்துறை அமைச்சு கூறியது. அந்த 11 பேரில் எழுவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்; நால்வருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட இளையர் இருவரும், சென்ற ஆண்டு டிசம்பரில் தடுத்து வைக்கப்பட்ட 18 வயது இளையர் முகம்மது இர்ஃபான் டன்யால் முகம்மது நூருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.
15 வயது இளையர், சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட ஸிம்பாப்வே போதகர் சலாஃபியின் உரைகளைச் செவிமடுத்ததாகக் கூறப்பட்டது.
வெளிநாட்டினர் சிலருடன் தொடர்புகொண்ட பிறகு அவரது தீவிரவாத நம்பிக்கைகள் வலுத்தன. ஷியா முஸ்லிம்கள், சூஃபி முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் ஆகியோர்மீது ஆயுதமேந்தித் தாக்குதல் நடத்தவும் இஸ்லாமியச் சட்டம் நடப்பில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்குச் செல்லவும் முடிவெடுத்தார்.
நண்பர்கள் சிலரைத் தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்க முயன்று அவர் தோல்வியுற்றார்.
16 வயது இளையரின் நடவடிக்கைகளை 2020ஆம் ஆண்டு முதலே உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கண்காணித்து வந்தது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் அவர் தீவிரவாதத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனிடையே, தீவிரவாத, பயங்கரவாதக் குழுக்கள் இளையர்களைக் குறிவைத்துச் செயல்படுவதாக உள்துறை மூத்த துணையமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

