உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெறாது என்று அதிபர் பைடன் அடித்துக் கூறிஉள்ளார்.
நேற்று முன்தினம் போலந்து தலைநகர் வார்சாவில் இருந்த அதிபர் பைடன், அவரைக் காண கூடியிருந்த கிட்டத்தட்ட 20,000 பேரிடம் உரையாற்றினார்.
"போலந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்ததை இன்றும் காண்கிறோம். சர்வாதிகாரிகளின் பேராசைக்கு எல்லையே இல்லை. இல்லை, முடியாது என்று உரக்கச் சொன்னால் மட்டுமே அது அவர்களது செவிகளை எட்டும்," என்று திரு பைடன் கூறினார்.
இரண்டாம் உலகப் போரைத் தவிர்க்கும் நோக்கில் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனிக்கு ஐரோப்பியத் தலைவர்கள் பலர் அடிபணிந்தது இறுதியில் பலன் அளிக்காமல் போனதை அதிபர் பைடன் நினைவூட்டினார்.
இந்நிலையில், உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டாகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், நட்பு நாடுகள் ஆகியவை உக்ரேனுக்கு பக்கபலமாக இருப்பது உறுதி என்று அதிபர் பைடன் தெரிவித்தார். அண்மையில் உக்ரேன் தலைநகர் கியவ்வுக்கு அதிபர் பைடன் எவ்வித அறிவிப்புமின்றி, யாரும் எதிர்பாராத வகையில் பயணம் மேற்கொண்டார்.
"கியவ் வலிமையுடனும் நிமிர்ந்து நிற்கிறது. அதுமட்டுமல்லாது, சுதந்திரமாகவும் இருக்கிறது," என்றார் திரு பைடன்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கருத்து, கொள்கை மோதல் அடுத்த சில மாதங்களில் மேலும் சிக்கலடையக்கூடும் என்றும் கூடுதல் அபாயமிக்கதாக அமையக்கூடும் என்றும் திரு பைடன் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, உக்ரேனுக்கு எதிரான போரை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மோசமாக்குவதாக ரஷ்ய அதிபர் விளாடிமியர் புட்டின் குறைகூறியுள்ளார். உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு எதிராக அவை செயல்
படுவதாக அவர் சாடினார்.
ரஷ்ய மக்களின் நலனைக் காக்கவும் 'நாட்ஸி' கொள்கை
களைக் கொண்ட உக்ரேனிய அரசாங்கத்தை எதிர்க்கவும் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அதிபர்
புட்டின் கூறினார்.
"அடுக்கடுக்காக வரும் சவால்களைப் படிப்படியாகவும் மிகுந்த கவனத்துடனும் கையாண்டு தீர்வு காண்போம்," என்று ரஷ்யர்களுக்கு அவர் உறுதி அளித்தார்.
ரஷ்ய அரசமைப்புச் சட்டப்படி, ஆண்டுதோறும் அதன் அதிபர் நாட்டு நடப்பு, அதன் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு அந்த அறிக்கையை அதிபர் புட்டின் வெளியிடவில்லை.
போரில் பல திடீர் திருப்பங்கள் ஏற்படுவதாகவும் அவை கண்ணிமைக்கும் நேரத்தில் மிக விரைவாக நிகழ்வதாகவும்
அதிபர் புட்டின் தெரிவித்தார்.
புதிய நிகழ்வுகளுக்காகக் காத்திருந்து போரின் போக்கு எவ்வாறு செல்கிறது என்பதை உறுதி செய்த பிறகே ரஷ்ய மக்களிடம் அதுகுறித்து பேச இருப்
பதாக அவர் கூறினார்.

