பயனீட்டாளர் விலைவாசி எனப்படும் பணவீக்கம் சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் மாதமான ஜனவரியில் படுவேகமாக உயர்ந்தது.
சீனப் புத்தாண்டுச் செலவினங்களும் 1 விழுக்காடு அதிகரிக்கப்பட்ட பொருள், சேவை வரியும் (ஜிஎஸ்டி) அந்த விலை உயர்வுக்குப் பெரிதாகப் பங்களித்தன.
தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்து மூலாதாரப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் ஜனவரி மாதம் 5.5 விழுக்காடு அதிகரித்தது. கடந்த 2008 நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஆக அதிகமான ஏற்றம் இது.
மூலாதாரப் பணவீக்கம் என்பது சிங்கப்பூர் குடும்பங்களின் செலவுகளை துல்லியமாக பிரதிபலிப்பதாகும்.
டிசம்பர் மாதம் 5.1 விழுக்காடாக இந்தப் பணவீக்கம் இருந்தது. ஜனவரியில் 5.6 விழுக்காட்டைத் தொடும் என்று புளூம்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கணிப்பைக் காட்டிலும் சிறிதாகக் குறைந்து 5.5 விழுக்காடாகப் பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு தொடர்ச்சியாக எட்டு மாதங்கள் அதிகரித்து வந்த மூலாதாரப் பணவீக்கம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஏற்ற இறக்கமின்றி தொடர்ந்தது.
ஜனவரி மாதம் அது மீண்டும் உயர்ந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று கூட்டாகத் தெரிவித்தன.
ஜிஎஸ்டி உயர்வுடன் சேவைகள், உணவு, சில்லறை மற்றும் இதர பொருள்களுக்கான விலைகள் உயர்ந்தது இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூட்டறிக்கை குறிப்பிட்டது.
விழாக்காலத் தேவைகளும் ஜிஎஸ்டி உயர்வும் விலை அழுத்தங்களை கூட்டியதாக சிஐஎம்பி பொருளியல் நிபுணர் சோங் செங் வுன் கூறினார். உலகளாவிய உணவு பணவீக்கம் குறைந்ததன் காரணமாக பயனீட்டாளர் செலவுகள் உயர்வில் சிறிது சுணக்கம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பணவீக்கம் ஜனவரி மாதம் 6.6 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. அது டிசம்பர் மாதம் 6.5 விழுக்காடாக இருந்தது. ஜனவரியில் ஒட்டுமொத்த பணவீக்கம் 7.1 விழுக்காட்டைத் தொடும் என்று பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்ததைக் காட்டிலும் சற்று குறைவாகவே பதிவாகி உள்ளது.
ஜனவரி மாத உணவு பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 8.1 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. டிசம்பர் மாதம் அது 7.5 விழுக்காடாக இருந்தது. தயாரிக்கப்பட்ட சாப்பாடுகளின் விலை விண்ணை நோக்கி உயர்ந்தது பணவீக்கத்தை அதிகரித்தது.
அதேபோல சேவைகளுக்கான பணவீக்கம் 3.7 விழுக்காட்டிலிருந்து 4.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. வெளிநோயாளி சேவைகளுக்கான கட்டணமும் படிப்பு மற்றும் இதர கட்டணங்களும் உயர்ந்ததால் இந்த ஏற்றம் பதிவானது.
மேலும், ஆண்டு அடிப்படையில் டிசம்பர் மாதம் குறைந்திருந்த தொலைத்தொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
சில்லறை மற்றும் இதரப் பொருள்
களுக்கான பணவீக்கம் 3.3 விழுக்காட்டைத் தொட்டது. டிசம்பர் மாதம் அது 2.8 விழுக்காடாக இருந்தது.
2008 நவம்பருக்குப் பிறகு உச்சத்தைத் தொட்டது