வரவுசெலவுத் திட்டம் 2023 குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை, கடுமையான நிதிச்சூழல், அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமநிலை காணும் நுண்ணிய முயற்சி என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று, வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதங்களின் நிறைவில் அவர் உரையாற்றினார்.
சமநிலை காணுதல் என்பது அவரது உரையின் முக்கியக் கருப்பொருளாக அமைந்திருந்தது.
கூடுதல் வரிகளுக்கும் கூடுதல் வழங்குதொகைகளுக்கும் இடையிலான சமநிலை, அன்றாட வாழ்க்கையின் பல்வேறு முன்னுரிமைகளுக்கு இடையிலான சமநிலை, அதிகரிக்கும் நிறுவன வரிகளுக்கும் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இடையிலான சமநிலை போன்றவை அவர் குறிப்பிட்டவற்றுள் அடங்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்க்கைச் செலவினம் தொடர்பில் கூடுதல் உதவி தேவை என்று கோரியிருந்தனர். குறிப்பிட்ட சில குழுவினருக்குக் கூடுதல் உதவி தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வேளையில் நிதியமைச்சு அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் சமநிலை காணவேண்டியிருந்ததாக துணைப் பிரதமர் விளக்கினார்.
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பெற்றோர், குடும்பம் தொடர்பான திட்டங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மற்ற திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
வரவுசெலவுத் திட்டத்தின் நன்மைகள் ஒவ்வொரு சிங்கப்பூரரையும் சென்றடையும் என்று அவர் உறுதியளித்தார்.
வரவுசெலவுத் திட்டம் 2023 குறித்து மூன்று நாள்கள் நடைபெற்ற விவாதங்களில் 58 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு திரு வோங் பதில் அளித்தார்.
"நிதி நிலைமையை மேலும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாகவைத்திருக்க அரசாங்கம் முயல்கிறது. ஆனால் ஆதரவுத் திட்டங்களை ஒரேயடியாகக் குறைக்க இயலாது. ஏனெனில் பொருளியலில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது," என்றார் அவர்.
சமுதாயத்தில் பெரும்பாலான நடுத்தர வருவாய் கொண்டோரின் நலன்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள இத்தகையோரைக் காட்டிலும் இங்கு உள்ளோர் குறைவாகவே வரி செலுத்துவதாகத் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
இவர்கள் செலுத்தும் வரித்தொகையைவிட அதிகமாகவே சலுகைகளைப் பெறுகின்றனர் என்றாரவர்.
"சிங்கப்பூரில் வரிகளுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 14 விழுக்காடு. பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது கணிசமாகக் குறைவு.
"மற்ற நாட்டுக் குடிமக்களைவிட சிங்கப்பூரர்கள் குறைவான வரி செலுத்தினாலும் உயர்தரமான பொதுச் சேவைகளைப் பெறுகின்றனர்.
"அதேநேரம் குறைவான வரிச்சுமை என்பது மக்களின் கடின உழைப்புக்கான வெகுமதி.
"இதனால் மக்களும் நிறுவனங்களும் அவரவர் ஈட்டிய வருவாயில் பெரும்பகுதியை அவர்களே பயன்படுத்த முடிகிறது," என்று திரு வோங் கூறினார்.
நாடாளுமன்றம் நேற்று $123.7 பில்லியன் மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரித்தது.
சிங்கப்பூரின் நிதிச் சூழல் கடுமையாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு வோங், பொருள், சேவை வரியின் இரண்டாம் கட்ட உயர்வு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
"இதைத் தவிர்த்தால் வருங்காலத்தில் சிக்கல்கள் அதிகமாகும். அத்துடன், சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில் அவர்களைப் பராமரிப்பதற்கு உரிய வளங்கள் குறையும்," என்று அவர் சொன்னார்.
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டிருப்பதைத் திரு வோங் சுட்டினார்.
"சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவின நெருக்குதலைச் சமாளிக்க அரசாங்கம் உதவுகிறது. அதேநேரம் தேவைகளை அதிகரிக்காமலும் பணவீக்கம் மோசமடையாமல் காப்பதிலும் அது கவனம் செலுத்த வேண்டியுள்ளது," என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் வலுவான நிதி அடித்தளத்தைக் கொண்டிருந்தால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வளப்பமுடன் திகழலாம் என்றார் அவர்.
மேலும் செய்திகள் பக்கம் 2ல்

