மலேசியப் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் கூடுதல் மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
மலேசியப் பொருளியல் சென்ற ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மேம்பட்ட வளர்ச்சி கண்டதால் நாட்டின் வருவாயும் உயர்ந்தது.
அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட திரு அன்வார் இந்த ஆண்டுக்கு விரிவான வரவுசெலவுத் திட்டத்தை நேற்று வெளியிட்டார்.
முன்னதாக திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் 372.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்ற புதிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
திரு அன்வார் நேற்று 386.1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டார். இது $117 பில்லியனுக்குச் சமம்.
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அரசாங்கத்தின் செலவுகள் கூடும் என்று கருதப்படுகிறது.
வரும் ஜூலை மாதம் மலேசியாவின் ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு வரவுசெலவுத் திட்டம் வெளியிடப்பட்டிருப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

