சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதம் சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவு குறைந்து 1.05ஆகப் பதிவானது.
திருமணம், பிள்ளை பெறுதல் ஆகியவற்றைத் தள்ளிப்போடுவோர் எண்ணிக்கையும் குறைவான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதியர் எண்ணிக்கையும் அதிகரித்தது இதற்குக் காரணங்கள்.
இருப்பினும் திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவை தொடர்பான சிங்கப்பூரர்களின் கனவுகளை நனவாக்க அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கவிருக்கிறது. பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
"சென்ற ஆண்டு குழந்தை பிறப்பு குறைந்ததற்கு, சீன நாள்காட்டியின்படி புலி ஆண்டாக இருந்ததும் ஒரு காரணம். சீனர்களிடையே பொதுவாக புலி ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவது வழக்கம்," என்றார் அமைச்சர்.
வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதத்தின்போது, சிங்கப்பூரின் மக்கள்தொகை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
நார்வே, ஃபின்லாந்து உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்றே சிங்கப்பூரிலும் மக்கள்தொகை பல ஆண்டுகளாகவே குறைந்து வருவதை அமைச்சர் இந்திராணி சுட்டினார்.
மூப்படையும் மக்கள்தொகை உள்ளிட்ட வேறு சில சிக்கல்களையும் சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது என்றார் அவர்.
புதிதாகத் திருமணம் செய்துகொண்டோர், இளம் பெற்றோர் ஆகிய பிரிவினருக்கு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டு இருக்கிறது.
தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கு விண்ணப்பிப்பதில் அவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் உண்டு என்பதை அமைச்சர் குறிப்பிட்டார்.
'பேபி போனஸ்' ரொக்கப் பரிசுத் தொகை, குழந்தை மேம்பாட்டுக் கணக்கு மானியம் போன்றவற்றுடன் வெள்ளிக்கு-வெள்ளி ஈடுசெய்யும் அரசாங்கத் தொகை வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டில் இருந்து சம்பளத்துடன்கூடிய தந்தையர் விடுப்பு நான்கு வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டினார்.
முதலாளிகளும் சக ஊழியர்களும் புதிதாகப் பிள்ளை பெற்ற தந்தையர் இந்த விடுப்பைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு நாள்கள் உயர்த்தப்படுமா என்றும் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்வோருக்கு அதன் தொடர்பில் விடுப்பு வழங்கப்படுமா என்றும் அமைச்சர் இந்திராணியிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கையில், "நீக்குப்போக்கான வேலை நேர ஏற்பாடுகளைச் செய்யும்படி முதலாளிகளை ஊக்குவிப்பது மற்றொரு முக்கிய உத்தி. இது சிறு குழந்தைகளின் பராமரிப்பாளர்கள் மட்டுமன்றி வயதானோரைப் பராமரிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
"இதுதொடர்பான முத்தரப்பு வழிகாட்டிக் குறிப்புகள் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்.
"இவற்றின்கீழ், நிறுவனங்கள் நியாயமான, சரியான முறைகளில் நீக்குப்போக்கான வேலை நேரக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும்," என்று அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.