ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புது விளையாட்டு மையம், நூலகம், பூங்கா
புதிய வட்டார விளையாட்டு மையம், பலதுறை மருந்தகம், பொது நூலகம், வட்டார நகர்ப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் தோ பாயோவில் இடம்பெறவிருக்கிறது.
அந்த ஒருங்கிணைந்த தோ பாயோ மேம்பாட்டுத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2030ஆம் ஆண்டுவாக்கில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு அறிவித்துள்ளது.
நீச்சல் குளங்கள், உள்விளையாட்டுக் கூடங்கள், மேற்கூரையுடன் கூடிய டென்னிஸ், ஃபுட்சால், வலைப்பந்துத் திடல்கள், உடற்பயிற்சிக்கூடம், உடல் உறுதி நிலையம், காற்பந்து அரங்கம் ஆகிய விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், நீர் விளையாட்டு, வலைப்பந்து, மேசைப்பந்து ஆகியவற்றிற்கான தேசிய பயிற்சி மையங்களையும் அங்கு நிறுவத் திட்டங்கள் உள்ளன.
லோரோங் 6 தோ பாயோவிற்கும் தீவு விரைவுச்சாலைக்கும் இடையே, 12 ஹெக்டர் பரப்பளவிலான பகுதியில் இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் இடம்பெறும்.
தோ பாயோ ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டமும் பொங்கோல் வட்டார விளையாட்டு மையமும் விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்போர்ட்எஸ்ஜி, சுகாதார அமைச்சு, தேசிய நூலக வாரியம், தேசிய பூங்காக் கழகம், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமப் பலதுறை மருந்தகங்கள் எனப் பல அமைப்புகளின் ஒத்துழைப்பில் தோ பாயோ ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்தொடர்பில் தோ பாயோவீடமைப்பு வளர்ச்சிக் கழக மையத்தில் கடந்த வார இறுதியில் ஒரு சாலைக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தங்கள் வட்டாரத்தில் அமைய இருக்கும் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வடிவமைப்பைக் கண்டு, அதன் தொடர்பில் குடியிருப்பாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதே அந்தச் சாலைக் காட்சியின் நோக்கம்.
"எங்கள் நகரத்திற்குப் புத்துயிரூட்டுவதைத் தொடர்வோம். அதன்மூலம் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியும் மேரிமவுண்ட் தனித்தொகுதியும் எல்லாக் குடியிருப்பாளர்களுக்கும் ஒரு நல்ல இல்லமாக நீடிக்கும்," என்று நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சரும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான திரு சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
"கட்டுமானப் பணிகள் முடிந்தபின், விளையாட்டு ரசிகர்களுக்கும் துடிப்பான வாழ்க்கைமுறையைக் கையாள பல சிங்கப்பூரர்களுக்கும் தோ பாயோ ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் ஒரு வரமாக விளங்கும்," என்று ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் டெக் யின் சொன்னார்.
இவ்வாண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட பொங்கோல் வட்டார விளையாட்டு மையப் பணிகள் 2024 இறுதிக்குள் நிறைவுபெற்றுவிடும்.

