இந்தியாவின் பெங்களூரில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடந்த உலகின் ஆகப் பெரிய 20 பொருளியல் நாடுகளின் கூட்டம், கூட்டறிக்கை வெளியிடப்படாமலேயே முடிந்தது.
கூட்டத்தில் உக்ரேன்மீது ரஷ்யா போர் தொடுத்தமைக்கு மற்ற எல்லா நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சீனாவும் ரஷ்யாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்தன.
இதனையடுத்து, இருநாள் கூட்டத்தில் பேசப்பட்டவை குறித்த தொகுப்புரை மட்டுமே இறுதியில் வாசிக்கப்பட்டது.
அந்தத் தொகுப்புரையில், உக்ரேன் மீதான தனது படையெடுப்பை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இப்போது ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அந்த 20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் நடைபெற்றது.
பொருளியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக கடந்த 1999ஆம் ஆண்டு ஜி20 அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஜி20 அமைப்பு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அமைப்பன்று என்றபோதிலும், உலகப் பொருளியலில் ரஷ்யா-உக்ரேன் போர் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதுகுறித்து மட்டும் கூட்டத்தில் விவாதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், ரஷ்யாவும் சீனாவும் அதற்கு இணங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, ஒருமித்த உடன்பாடு எட்டப்படாமலேயே கூட்டம் முடிவடைந்தது.
ரஷ்யா-உக்ரேன் சண்டையில் இந்தியா எப்பக்கமும் சேராமல் நடுநிலை வகித்து வருகிறது. அரசதந்திர ரீதியில் அதற்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்திவரும் அதே வேளையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் இந்தியா அதிகரித்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் சண்டை தொடர்பில் கடந்த 23ஆம் தேதி ஐக்கிய நாட்டு மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியாவும் சீனாவும் பங்குகொள்ளவில்லை. ஆயினும், உக்ரேனிலிருந்து ரஷ்யா தனது படைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் முடிந்த ஜி20 கூட்டத்தின் தொகுப்புரையானது, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சண்டைக்குத் தீர்வுகாண்பது, நெருக்கடி நிர்வாகம், அரசதந்திர உறவுகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

