தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நேற்று வாக்குப் பதிவு நிறைவுபெற்றுள்ளது.
இந்திய நேரப்படி நேற்றுக் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 6 மணிவாக்கில் நிறைவுபெற்றது. ஏறத்தாழ 2.27 லட்சம் வாக்காளர்கள் இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
வாக்குப்பதிவின் முடிவில், 74.69% வாக்குகள் பதிவானதாகக் கூறப்பட்டது. இது, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவானவதைவிட அதிகம் எனத் தமிழக ஊடகங்கள் கூறின.
இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில், இத்தொகுதியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவரையும் சேர்த்து மொத்தம் 77 பேர் இதில் களமிறங்கினர்.
இடைத்தேர்தல் வாக்களிப்பிற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 32, பதற்றமானவை என்று வகைப்படுத்தப்பட்டன. தொகுதி முழுவதும் 3,000க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
உரிய ஆவணங்களைக் கொண்டுவராதோரை அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.
வாக்காளர்கள் கைத்தொலைபேசிகளை உள்ளே கொண்டுசெல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறும்.
தகவல், படம்: இந்திய ஊடகம்
மேலும் செய்தி பக்கம் 4ல்

