இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்வோருக்கு ஆசி வழங்குகிறது ஓர் இயந்திர யானை (படம்).
10.5 அடி உயரத்தில், 800 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இது, உயிருள்ள யானையைப் போன்றே தோற்றமளிக்கிறது. விலங்குகள் நலச் சங்கத்தால் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டுள்ள இந்த யானைக்கு இரிஞ்சிடப்பில்லி ராமன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
காணிக்கை வழங்குவது தொடர்பான 'நடையிறுத்தல்' நிகழ்ச்சி நேற்று முன் தினம் இடம்பெற்றது.
இந்த யானையால், ஒரு நேரத்தில் நான்கு மனிதர்களைத் தன்மேல் சுமந்து வலம் வர முடியும். இதன் தலை, கண்கள், வாய், துதிக்கை, காதுகள், வால் என அனைத்துப் பாகங்களும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை.
கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோயில் விழாக்களில் இவை பங்கேற்பது வழக்கம். பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுடன் கோயிலின் அன்றாட நடவடிக்கைகள் சிலவற்றிலும் இந்த யானைகள் கலந்துகொள்ளும்.
இத்தகைய யானைகள் சில நேரங்களில் மதம் பிடித்து யானைப் பாகரைத் தாக்குவது, பக்தர்களை விரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்ததுண்டு. இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும் யானைகளைப் பாதுகாக்கவும் ஆலோசனை நடத்திய விலங்குகள் நல சங்கம் இயந்திர யானைத் திட்டத்தைக் கையிலெடுத்தது.
தற்போது திருச்சூர் கோயிலில் உள்ள இயந்திர யானை தும்பிக்கை நீட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. இனி கோயில் ஊர்வலத்தில் சாமி சிலைகளையும் இதுவே சுமந்து செல்லும் என்று கூறப்பட்டது.
மற்ற கோயில்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

