மாணவர்கள் தேர்வுத் தரம் பற்றி அதிகம் கவலைப்படாமல் தங்களுக்குப் பிடித்தவற்றில் அதிக கவனம் செலுத்தவும் பெரியவர்கள் பின்னாளில் தங்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ளவும் ஏதுவாக பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு ('ஏ' நிலை) மதிப்பீட்டு முறை மாற்றம் காண்கிறது.
எதிர்வரும் 2026 முதல் சுயேட்சைப் பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்களின் ஒட்டுமொத்தத் தேர்வு முடிவுகளை உயர்த்தினால் மட்டுமே நான்காவது பாடத்தொகுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அத்துடன், 2026ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக அனுமதிக் கணக்கீட்டுக்கான அதிகபட்சப் புள்ளி 70 ஆகக் குறைக்கப்படும். அது தற்போது 90 ஆக உள்ளது.
கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இந்த மாற்றங்களை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரையாண்டுத் தேர்வு நீக்கம்
தொடக்கக் கல்லூரிகளிலும் (ஜேசி) மில்லேனிய கல்வி நிலையத்திலும் (எம்ஐ) அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாக அகற்றப்படும்.
அவற்றுக்குப் பதிலாகப் பள்ளி நிலையில் அதிகத் தேர்வுகளை நடத்தமாட்டா.
ஒரு தவணையில், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரேயொரு முறைசார்ந்த மதிப்பீடு மட்டுமே வழங்கப்படும் என கல்வி அமைச்சு விளக்கியது.
ஒப்படைப்புத் திட்டம்,
பொதுத் தாள் பாட மாற்றங்கள்
தொடக்கக் கல்லூரியில் அடுத்த ஆண்டு சேருவோரின் ஒப்படைப்புத் திட்டம் (புரோஜெக்ட் ஒர்க்), தேர்ச்சி அல்லது தோல்வி என்னும் முறையில் மதிப்பிடப்படும்.
பல்கலைக்கழக அனுமதிக் கணக்கீட்டிலிருந்து இந்தப் பாடம் அகற்றப்படுகிறது.
"இந்த மாற்றம், மதிப்பெண்களால் உந்தப்படுவதைவிட, ஆர்வமுள்ள துறைகளில் அதிக நாட்டத்துடன் படைப்பாற்றலைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்கிறது," என்று திரு சான் கூறினார்.
எனினும், சுயேட்சைப் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெற 2026 முதல் மாணவர்கள் ஒப்படைப்புத் திட்டப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வரும் 2024ல் தொடக்கக் கல்லூரிகளிலும் மில்லேனியக் கல்வி நிலையத்திலும் சேரும் மாணவர்களுக்கு பொதுத் தாள் (ஜிபி) கட்டாயமாகிறது.
கல்வியறிவும் ஆய்வும் (நாலேட்ஜ் அண்ட் என்குவைரி) பாடம் தத்துவத்தில் அதிக கவனம் செலுத்தும். இப்படிப்பு தொடர்ந்து வழங்கப்படும். ஆனால் அது இனி இப்பாடத்தை பொதுத் தாளுக்கு மாற்றாகப் படிக்க முடியாது.
பொதுத்தாள் பாடத்திட்டம் நடப்பு விவகாரங்கள், சமகால பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. 2022 கிட்டத்தட்ட 100 மாணவர்கள் பொதுத் தாளுக்குப் பதிலாக ஒப்படைத் திட்ட பாடத்தைப் படித்தனர்.
கல்வியமைச்சு 'ஏ' நிலை பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளதா என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங், அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினர் டேரல் டேவிட் கேட்டதற்குப் பதிலளித்தும் பேசிய அமைச்சர் சான் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
"21ஆம் நூற்றாண்டின் திறன் மேம்பாட்டுக்கு அதிக நேரத்தை ஒதுக்கும் வகையில் காலப்போக்கில் பாடத்திட்ட உள்ளடக்கத்தை படிப்படியாகக் குறைத்து வந்துள்ளோம். தற்போது பெரும்பாலான ஏ-நிலைப் பாடத்திட்ட உள்ளடக்கம், ஒப்பிட பயன்படுத்தப்படும் அனைத்துலகப் பாடத்திட்டங்களுடன் ஒத்ததாகவோ அல்லது அதற்கு கிட்டத்தட்ட சமமாகவோ உள்ளது என்றார் அவர். "கல்வி முறைக்குப் பாதிப்பில்லாமல், பாடத்தொகுப்பைக் குறைக்க முடியாது," என்பதை அவர் சுட்டினார்.
தற்போது ஜேசி, எம்ஐ மாணவர்கள் பொதுவாக பொதுத் தாள், ஒப்படைப்புத் திட்டம் ஆகியவற்றுடன் மூன்று எச்2, ஒரு எச்1 நிலைப் பாடங்களைப் படிக்கிறார்கள். தாய்மொழி மொழிப் பாடத்தையும் படிக்கலாம்.
அதிக பல்கலைக்கழக இடங்கள்
மேலும், வாழ்நாள் கல்வி பிரிவினரில் பங்கேற்பு விகிதத்தை கல்வி அமைச்சு அதிகரிப்பதால், அதிகமான சிங்கப்பூரர்கள் அரசாங்க நிதி பெறும் பட்டப்படிப்புத் திட்டங்களில் சேரலாம். இதன்படி, மாணவர்கள், பெரியோர் ஆகிய இருதரப்பினரையும் உள்ளடக்கிய இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டளவில் தற்போதைய 50 விழுக்காட்டிலிருந்து இருந்து 60 விழுக்காடாக உயரும் என்று கல்வியமைச்சர் சான் கூறினார்.
அதாவது, வரும் 2025இல் கூடுதலாக 2,300 பொது நிதியுதவி பெறும் பல்கலைக்கழக இடங்கள் இருக்கும்.

