தொடர்ந்து பெய்யும் மழையினால் ஜோகூர் மாநிலம் மீண்டும் வெள்ளத்தினால் தத்தளிக்கிறது. 6,000க்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கி 20 வயதுகளில் இருக்கும் கே. சரத்குமார் உயிரிழந்துவிட்டார். நேற்றுக் காலை 7.20 மணியளவில் தனது டொயோட்டா அவான்சா காரில் அருகிலுள்ள தொழிற்சாலைக்கு அவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
"புகார் பெறப்பட்டதும் காவல் துறையினர் தேடுதல் பணியில் இறங்கினர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு நண்பகல் 12.20 மணி அளவில் நீரில் மூழ்கிய காரில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது," என்று குலுவாங் காவல்துறை தலைமை உதவி ஆணையர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உதவி நிறுவனங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக நிவாரண மையத்தை நேற்றுப் பார்வையிட்ட பிறகு ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹபீஸ் ஹாசி செய்தியாளர்களிடம் கூறினார்.
செகாமாட் மாவட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் தஞ்சம் புகுந்த படங்களை வெளியிட்டுள்ளனர்.
ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் இன்று வரை மழை தொடரும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

