மோனலிசா
'கோஜெக்' வாடகை வாகனம் வழிதடுமாறி நீச்சல் குளத்திற்குள் இறங்கியதில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த மூதாட்டியும் வாகன ஓட்டியும் உயிர்தப்பினர். அப்பர் புக்கிட் தீமா சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
மகளையும் பேத்தியையும் பார்க்க 78 வயது மலேசியரான வசந்தா குமரன் சிங்கப்பூர் வந்திருக்கிறார். சம்பவத்தன்று இரவு 7.51 மணிக்கு செங்காங் ஃபெர்ன்வேல் பகுதியிலுள்ள மகளின் வீட்டிலிருந்து அப்பர் புக்கிட் தீமாவிலுள்ள பேத்தி வீட்டிற்கு கோஜெக் வாகனத்தில் தனியாகப் புறப்பட்டார் வசந்தா.
வாகனத்தை முன்பதிவு செய்த பேத்தி யோகேஸ்வரி நித்தியானந்தன், 42 இணைய வரைபடத்தில் வாகனத்தின் பயணத்தை கண்காணித்து வந்தார்.
தீவு விரைவுச்சாலையிலேயே நெடு நேரமாக வாகனம் நின்றுகொண்டிருந்த தால் சந்தேகமடைந்த யோகேஸ்வரி பாட்டியையும் வாகன ஓட்டுநரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
இருமுறைக்கு மேல் பாட்டியின் மலேசிய எண்ணைத் தொடர்புகொள்ள இயலவில்லை. ஒரு கட்டத்திற்குமேல் வாகன ஓட்டுநரும் கைப்பேசியை எடுக்காத சூழலில் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
"வாடகை வாகனத்தில் நான் தனியாகப் பயணித்தது இதுதான் முதன்முறை. இப்போது நினைத்தாலும் மிகவும் பதற்றமாக இருக்கிறது," என்ற திருவாட்டி வசந்தா சம்பவத்தை விவரித்தார்.
"வாகனம் புறப்பட்டதிலிருந்தே ஓட்டுநர் வழிதெரியாமல் தடுமாறினார். கடும் மழையில் சரியாக பாதையும் தெரியாத சூழலில் பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி வழிகேட்டார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் கழித்து 9.17 மணிக்கு பேத்தி வீட்டுக்கு வந்துசேர்ந்தார்.
"வாகனம் நீச்சல்குளத்தை நெருங்கியபோதே, அது நீச்சல் குளம் என அலறினேன். ஓட்டுநர் என்னைப் பொருட்படுத்தவில்லை. அது நீச்சல்குளம் அல்ல தரையில் உள்ள மழைநீர் என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாகனம் குளத்திற்குள் இறங்கிவிட்டது" என்று படபடப்புடன் கூறினார் வசந்தா.
வாகனத்தின் முதல் இரண்டு சக்கரங்க ளும் 1.8 மீட்டர் ஆழமுள்ள நீச்சல்குளத்திற்குள் மூழ்க ஆரம்பித்ததும் திருவாட்டி வசந்தா, கைப்பையை எடுத்துக்கொண்டு காரின் கதவைத் திறந்து நீச்சல்குளத்திற்குள் இறங்கி வேகமாக கரையேறினார். குடியிருப்பின் காவலாளிகள், அக்கம்பக்கத்தினர் அவர் வீடு செல்ல உதவினர்.
"தவிர்க்க முடியாத வேலை இருந்ததால், பாட்டியைத் தனியாக அனுப்பினோம். இதுவரை இச்சம்பவம் குறித்து கோஜெக் நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மன்னிப்புக்கோரும் மின்னஞ்சல் மட்டுமே வந்தது. நிறுவனம் வழிதெரியாத ஓட்டுநருக்கு உதவவில்லை. வண்டி வர தாமதமாகி நான் அழைத்தற்கும் பதில் சொல்லவில்லை," என்று ஆதங்கப்பட்டார் யோகேஸ்வரி நித்யானந்தன்.
மலேசியாவின் சிரம்பான் பகுதியில் தனியாக வசித்து வரும் திருவாட்டி வசந்தா, இச்சம்பவம் தமது துணிச்சலைக் குலைத்துவிட்டது என்றார்.
வரும் வெள்ளிக்கிழமை மகளுடன் இந்தியா செல்லும் திட்டத்தில் இருக்கும் திருவாட்டி வசந்தாவின் பயணம் குறித்து குடும்பத்தினர் யோசிக்கின்றனர்.