வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 'பொங்கோல் வாட்டர்வே சன்ரைஸ் II' வீடுகளை வாங்கிய அனைத்து வீட்டு உரிமையாளர் களுக்கும் இம்மாத இறுதியில் வீட்டுச் சாவி வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் கொள்ளை நோய் காரணமாக வீடுகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக அவர்களுக்கு மொத்தம் $5,156,700 மதிப்பிலான இழப்பீடு வழங்கப்படுகிறது.
இதனால் 896 வீட்டு உரிமையாளர் களுக்கு வீட்டுச் சாவியோடு இழப்பீடும் கிடைக்கவிருக்கிறது.
தாமதமான இரண்டு தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஒ) வீட்டுத் திட்டங்களில் 'பொங்கோல் வாட்டர்வே சன்ரைஸ் II' திட்ட மும் ஒன்று.
வீட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலவரத்தை நேற்று வெளியிட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஒவ்வொரு வீட்டு உரிமை யாளருக்கு ஆயிரம் வெள்ளி முதல் $10,500 வரை இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தது. அதாவது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உரிமையாளரும் சராசரியாக 5,750 வெள்ளி பெறுவர். வீட்டின் விலை மற்றும் தாமதத்திற்கு ஏற்ப இழப்பீடு மாறுபடும்.
இந்தத் திட்டத்தில் ஏழு புளோக்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது. மொத்தமுள்ள 1,014 வீடுகளில் 951 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2021 அக்டோபர் மாதத்துக்குள் முன்பதிவு செய்த மொத்தம் 896 வீட்டு உரிமையாளர்கள் மட்டும் இழப்பீட்டுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே தாமதமான மற்றொரு பிடிஒ திட்டமான செங்காங்கில் உள்ள 207 வீடுகளை உள்ளடக்கிய 'ஆங்கர்வில்லேஜ்' வரும் மே முதல் ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என வீவக தெரிவித்தது. இந்தத் திட்டம் இவ்வாண்டு ஜனவரியில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் வீவக தெரிவித்திருந்தது. இதன் வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தாமதமான காலத்திற்கேற்ப $2,270 முதல் $6,360 வரை இழப்பீடு பெறுவர்.
இந்த செங்காங் குடியிருப்புத் திட்டத்தில் மே மாதத்தில் வீட்டுச் சாவியைப் பெறு வோருக்கு $2,270 முதல் $4,240 வரையும் ஜூலையில் சாவியைப் பெறுவோருக்கு $3,400 முதல் $6,360 வரையும் இழப்பீடு வழங்கப் படும் என்றும் கழகம் அறிவித்திருந்தது.
'வாட்டர்வே சன்ரைஸ் II' குடியிருப்பு வட்டாரத்திற்கு நேற்று சென்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, டிசம் பரிலிருந்து பத்தில் ஆறு குடியிருப்பாளர்கள் வீட்டுச் சாவியைப் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். எஞ்சியவர்களுக்கு இம்மாத இறுதி யில் வீட்டுச் சாவி வழங்கப்படும்.
'வாட்டர்வே சன்ரைஸ் II' குடியிருப்பு வளாகத்தில் ஈரறை ஃபிளக்ஸி, மூவறை, நான்கறை வீடுகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, வீடு கிடைக்க தாமதமானதால் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வீட்டு உரிமையாளர்களின் பொறுமை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மைக்கு திரு டெஸ்மண்ட் லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.
"அவர்களுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய அசௌகரியத்தையும் நிச்சயமற்ற நிலையையும் பொறுத்துக்கொண்டனர்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.