வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தி தமிழ்நாடு அரசுக்குப் பெரும் தலை
வலியைத் தந்துள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட அரசு, வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மேலும் வதந்தி பரவாமல் தடுப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
எல்லா மாவட்டங்களிலும் உள்ள வடஇந்தியத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுடன் கலந்துபேசு
வதற்கு ஏதுவாக இந்தி தெரிந்த அதிகாரிகள் அமர்த்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து ள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வடஇந்தியாவுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் இது ஹோலி பண்டிகைக்கான கூட்டமா அல்லது அச்சத்தின் காரணமாக ஊர் திரும்பும் கூட்டமா என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' கேள்வி எழுப்பி உள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் கூட்டம் கூட்டமாக அத்தகைய தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியதை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாக அச்செய்தி குறிப்பிட்டது.
இதற்கிடையே, தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வடமாநிலங்களில் வேகமாகவும் கடுமையாகவும் பரவிய வதந்தி உண்மையா என்பதை அறிய பீகார் மாநில அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்புவை அந்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
பீகார் அதிகாரிகளில் பாலமுருகன் என்ற தமிழரும் உள்ளார். அந்த மாநில உள்ளாட்சித் துறைச் செயலாளராக இருக்கும் அவர், தமிழ்நாட்டில் அச்சமின்றி இருப்பதாக பீகார் மாநில தொழிலாளர்கள் தமது குழுவிடம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் கூறினார்.
வதந்தியால் அச்ச உணர்வு ஏற்பட்டதாகவும் தற்போது உண்மை நிலையை அறிந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு நேற்று சந்தித்துப் பேசினார். வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தேவையான பாதுகாப்பு அளித்து வருவதாக அப்போது நிதிஷ் குமாரிடம் அவர் விளக்கினார்.
இந்தியாவில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்பதாகக் காரணம் காட்டி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்து ஊருக்குத் திரும்பு வது குறித்து கோவை தொழில்துறை கூட்டமைப்பான 'போசியா' நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர்.
"எங்களது நிறுவனங்களில் 50 விழுக்காடும் நூற்பாலைகளில் 80 விழுக்காடும் வட
மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மார்ச் 7ஆம் தேதி (நேற்று) அவர்களுக்கு சம்பள நாள். சம்பளம் வாங்கிய பின்னர் ஊருக்குச் சென்றுவிட்டால் ஹோலியை காரணம் காட்டி அவர்கள் திரும்பி வருவார்களா என்பது தெரியவில்லை," என்று அந்த அமைப்பினர் கூறினர்.
ஆனால் 'என்டிடிவி'யிடம் பேசிய வடமாநில தொழிலாளர்கள், ஹோலி முடிந்ததும் தமிழகம் திரும்புவதாகவும் தமிழ்நாட்டு நண்பர்கள் தங்களைக் காப்பார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி காணொளி வெளியிட்டதன் தொடர்பில் மனோஜ் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கி இருந்த அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடஇந்தியா செல்லும் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்