அனைத்துலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்த ஒரு மாநிலமும் பெண்களைப் போற்றும் வகையிலான இந்த முயற்சியை எடுத்ததில்லை என்றும் உலகளவில்கூட பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் ஓர் அரிதான சலுகை இது என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் எல்லாப் பெண்களுக்கும் இன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதாக மாநில தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி அறிவித்துள்ளார்.
அத்துடன், மகளிர் சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கும் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வரும் மகளிர் அமைப்புகளுக்கும் 750 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி இல்லாக் கடனும் வழங்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.
இந்த அறிவிப்பால் தெலுங்கானா பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநில ஆளுநராக இருப்பவரும் ஒரு பெண்தான். தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் அப்பதவியில் உள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், பெண்களை இழிவுபடுத்துவோருக்கு வெகுமதிகள் வழங்கப்படுவது வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
"தெலுங்கானா என்பது ராணி ருத்ரம்மாவின் பூமி. நானும் வேலு நாச்சியார் என்னும் வீராங்கனையின் மண்ணிலிருந்து வந்தவள். எனவே பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் கருத்தைப் பதிவு செய்யுமுன்னர் எச்சரிக்கையாக இருங்கள்," என்று திருமதி தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

