தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அதிக வல்லமை வாய்ந்த தலைவர்களுக்குப் பிறகு, வலுவாக செயல்பட்டு வந்த அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்து இருக்கின்றன.
பாஜகவில் இருந்து விலகுவோரை அதிமுகவும் அதிமுகவில் இருந்து விலகுவோரை பாஜகவும் போட்டி போட்டுக்கொண்டு சேர்த்து வருவது ஒருபுறம் இருக்க, இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு போராட்டக் களத்தில் குதித்து இருக்கிறார்கள்.
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி சுவரொட்டிகளை கோவில்பட்டியில் பாஜகவினர் கிழித்து, கொளுத்தினர்.
அதனை ஆட்சேபித்து அதிமுகவினர் பேரணி நடத்தியதை அடுத்து பாஜகவைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அதிமுகவின் மற்றொரு தரப்பாகச் செயல்படும் ஓ. பன்னீர் செல்வத்தைச் சந்திக்க சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து யார் விலகினாலும் அதைப் பற்றி தான் கவலைப்படுவதாக இல்லை என்று தெரிவித்தார்.
கருணாநிதி, ஜெயலலிதாவை போல தானும் மிக வலுவான ஒரு தலைவர் என்று குறிப்பிட்ட அவர், கட்சியில் குற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் சிலர் கட்சியைவிட்டு வெளியேறுவதாகவும் கூறினார்.
தன்னுடைய தலைமைத்துவத்தின்கீழ் போகப்போக செயல்பாடுகள் மேலும் உறுதியாக இருக்கும் என்றாரவர்.
திராவிடக் கட்சிகள் பாஜகவினரை இழுத்து பாஜகவின் ஆதரவுடன் அரசியல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதையே இது காட்டுவதாகவும் அண்ணாமலை கூறினார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான நிர்மல் குமார் சில நாள்களுக்கு முன் பாஜகவுக்கு முழுக்கு போட்டு விட்டு அதிமுகவில் சேர்ந்துவிட்டார். அதைத் தொடர்ந்து இதர சிலரும் பாஜகவில் இருந்து அதிமுக போய்விட்டனர்.
இந்நிலையில், மதுரையில் அண்ணாமலை முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பாஜகவில் சேர்ந்தனர்.
பாஜகவினர் அதிமுகவில் சேர்வது பற்றி கருத்து கூறிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இது அதிமுக கட்சி வலுவடைவதையே குறிக்கிறது என்றும் பாஜகவில் இருந்து விலகி மேலும் பலர் அதிமுகவில் சேரவுள்ளனர் என்றும் கூறினார்.
அதேபோல, அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த முருகவேல், நீண்டகாலமாக தாங்கள் எதிர்பார்த்து வரும் ஒன்று நடந்தால் நல்லது என்று கூறினார்.
பாஜகவுடன் உறவு வைத்திருப்பதன் காரணமாகத்தான் அதிமுகவுக்குத் தோல்வி ஏற்படுவதாக அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் கருதுகிறார்கள் என்று அப்போதைக்கு அப்போது தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக-பாஜக இடையே விரிசல் அறிகுறிகள் தெரியவந்து இருப்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே காரணமாக இருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்களைக் குறிவைத்து அதிமுக செயல்படத் தொடங்கி இருப்பதாக அரசியலில் பேச்சு அடிபடுகிறது.