இலங்கை பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது உதவிக்கரம் நீட்டிய மூன்று பெண்களுக்குத் தாம் நன்றி கூறுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
பொருளியல் நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா பெருமளவில் நிதியுதவியை வழங்கியது. இதன் தொடர்பில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் பாராட்டினார்.
அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
திருவாட்டி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூன்று அனைத்துலகப் பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி சீராகி வருவதாக அவர் தெரிவித்தார்.
"இலங்கை பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த நேரத்தில் கைகொடுத்த மூன்று பெண் தலைவர்களில் முதன்மையானவர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இலங்கை நொடித்துப் போனதாக அறிவித்த பிறகும் அவர்தான் இந்தியப் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்களுடன் பேசி, மூன்று பில்லியன் டாலர் கடன் வழங்க முடிவெடுத்தார்," என்றார் அதிபர் விக்கிரமசிங்கே.
"நொடித்துப்போன நாட்டுக்கு கடன் கொடுக்கும் துணிச்சலான முடிவை எடுத்த அவருக்கு நன்றி," என்று குறிப்பிட்டார்.
அதேபோல அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் எல்லனும் இலங்கைக்கு அமெரிக்க நிதிஉதவி கிடைப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறிய திரு விக்கிரமசிங்கே, அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றுத்தருவதில் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றி கூறினார்.
இந்த மூன்று பெண்களும் தக்க நேரத்தில் உதவியிருக்காவிட்டால் இலங்கையின் நிலை மிக மோசமாகியிருக்கும் என்றார் அதிபர் விக்கிரமசிங்க.

