அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீது நேற்று நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அரசாங்கத்தின் கொவிட்-19 உதவித் திட்ட நிதியாக 232.5 மில்லியன் ரிங்கிட் (S$69.8 மில்லியன்) தொடர்பான அந்தக் குற்றச்சாட்டுகள் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் சுமத்தியது.
கடந்த 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 17 மாதங்கள் மலேசியாவின் பிரதமராக இருந்தார் முகைதீன்.
பெர்சத்து கட்சியின் தலை
வராகவும் இருந்த அவர் மீது 195 மில்லியன் ரிங்கிட் முறைகேடு தொடர்பில் மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றம் தொடர்பானவை அவை. தமது பிரதமர் பதவியைப் பயன்படுத்தியும் பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியைப் பயன்படுத்தியும் நான்கு நிறுவனங்களிடம் இருந்தும் தனிப்பட்ட ஒருவரிடமும் 232.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக 75 வயது முகைதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
புகாரி ஈகுவிட்டி, நெப்டூரிஸ், மாம்ஃபோர் என்பன அந்த நிறுவனங்கள். அஸ்மான் யூசோஃப் என்பவர் அந்த தனிப்பட்ட நபர். 2020 மார்ச் 1ஆம் தேதிக்கும் 2021 ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் முகைதீன் இச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2021 பிப்ரவரி 25ஆம் தேதிக்கும் 2022 ஜூலை 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் புகாரி ஈகுவிட்டியிடம் இருந்து சட்டவிரோத நட
வடிக்கை மூலம் 120 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அனுகூலங்
களைப் பெற்றதாகவும் முகைதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிபதி அஸுரா ஆல்வி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த முகைதீன் அவற்றின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி முகைதீன் 20 ஆண்டு சிறைவாசத்தை எதிர்நோக்குகிறார். அத்துடன், லஞ்ச ஊழல் தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் இதில் எது அதிகமோ அது அவருக்கு அபராதமாகவும் விதிக்கப்படக்கூடும். அதிகார முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகள் இவை. 2 மில்லியன் ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்ட முகைதீனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது.
அதேபோல கள்ளப் பணமாற்ற குற்றத்திற்கு 15 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் முறைகேட்டுத் தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கு அல்லது 5 மில்லியன் ரிங்கிட் இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படக்கூடும்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முகைதீன், "நான் லஞ்சம் பெற மறுத்தேன். ஒரு காசைக்கூட எனது சொந்த பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை. வழக்கில் நீதி கிடைக்க நானும் எனது வழக்கறிஞர்களும் போராட உள்ளோம்," என்றார்.

