சென்னையில் ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்று பிரியாணிப் பிரியர்
களிடையே பிரபலமடைந்து வருகிறது. பிவிகே (பாய் வீட்டு கல்யாணம்) என்னும் அந்த நிறுவனம் அண்மையில் சென்னை கொளத்தூர் பகுதியில் தனித்துவமான மின்னிலக்க உணவகத்தைத் திறந்துள்ளது.
மனிதர்களின் உதவியின்றி மக்கள் தங்களுக்குப் பிடித்த பிரியாணியையும் மற்ற உணவு வகைகளையும் இந்த மின்னிலக்க உணவகத்தில் வாங்கிச் செல்லலாம். அங்கு 32 அங்குல தொடுதிரையுடன் கூடிய எந்திரங்கள் பல உள்ளன.
பிடித்த உணவை அந்தத் திரையில் தேர்ந்தெடுத்த பின்னர் 'கியூஆர்' குறியீடு மூலம் அதற்கான பணத்தைச் செலுத்தலாம்.
மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் உணவு அந்த எந்திரத்தின் விநியோகத்தட்டில் கவர்ச்சிகரமான பொட்டலமாக வந்துவிடும். இந்தியாவின் முதல் மின்னிலக்க பிரியாணி உணவகம் என்று இது கருதப்படுகிறது.
அண்மைய நாள்களாக சமூக ஊடகங்களில் இந்த உணவகம் பற்றிய தகவல்கள் படங்களுடன் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
திருமண விழாக்களில் பரிமாறப்படும் அதே சுவையுடன் அங்கு பிரியாணியும் மற்ற உணவு வகைகளும் தயாரிக்கப்படுவதாக பிவிகே நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ். ஃபஹீம் தெரிவித்தார்.
"பிரியாணிக்காக நாங்கள் பயன்படுத்தும் இறைச்சி, பண்ணையில் வெட்டப்பட்ட உடன் நான்கு மணி நேரத்திற்குள்ளாக சமைத்து முடிக்கப்படுகிறது. எனவே இறைச்சியைப் பதப்
படுத்துவது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை," என்று அவர் கூறினார்.
இந்த மின்னிலக்க உண
வகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் மேலும் 12 இடங்களில் இதேபோன்ற உணவகத்தைத் திறக்க பிவிகே திட்டமிட்டுள்ளது.
2020 ஜனவரியில் தொடங்கப்பட்ட பிவிகே, சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ஒரு மணி நேரத்தில் உணவு விநியோகம் என்னும் புதிய உத்தியைக் கையாண்டதன் மூலம் உணவுப் பிரியர்களின் மனதில் வேகமாக இடம்பிடித்தது.
'த பிவிகே பிரியாணி' என்னும் கைப்பேசி செயலியையும் இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.