ஒற்றையர்களுக்கு தனியறை, பொதுவான வசதிகள்
வருமானம் குறைந்த ஒற்றையர்களுக்காக பொதுவசதியுடன் தனியறைகளை வாடகை வீடாக வழங்கும் புதிய பாணி திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பரிசீலித்து வருகிறது.
'ஓரறை பகிர்வு வசதிகள்' என்றழைக்கப்படும் இந்த முன்னோடித் திட்டம் இவ்வாண்டு இறுதியில் சோதிக்கப்படும்.
வருமானம் குறைந்த ஒற்றையர்கள் ஓரறையில் வசிக்கலாம். ஆனால் கழிவறை, சமையலறை போன்ற வசதிகள் பொதுவாக இருக்கும்.
இந்தப் புதிய திட்டம், ஒற்றையர்களின் தனிச்சுதந் திரத்தை பாதிக்காத, அதே சமயத்தில் சமூகத்துடன் சேர்ந்து வாழும் சூழலைத் தருகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் வீவக தெரிவித்தது.
அங் மோ கியோ அவென்யூ 8ல் முன்பு ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி இருந்த இடத்தில் புதிய பாணி வாடகைத் திட்டம் அறிமுகமாகிறது.
அங்கு 11 மாடிகளைக் கொண்ட இரண்டு புளோக்குகள் உள்ளன.
ஏறக்குறைய 480 வாடகைதாரர்கள் இங்கு ஓரறைகளில் தங்க வைக்க முடியும். இவை, 240 வீடுகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வோர் அறையும் 9 சதுர மீட்டர் (சுமார் 97 சதுர அடி) பரப்பளவில் இருக்கும். ஒற்றைக் கட்டில், அலமாரி, நாற்காலி, மேசை, சுவர் அலமாரிகள், சிறிய குளிர்பதனப் பெட்டி போன்ற அடிப்படை வசதிகள் அறைகளில் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் சுகாதாரக் காரணங்களுக்காக மெத்தைகளை வாடகைதாரர்களே வாங்க வேண்டும் என்று வீவக தெரிவித்தது.
ஒவ்வொரு மாடியிலும் இருக்கும் 24 வாடகைதாரர்களுக்கு ஐந்து அடுப்புகள் உள்ள சமைய லறை, கைகழுவும் தொட்டி, அலமாரி போன்ற வசதிகள் பொதுவாக இருக்கும்.
ஒவ்வொரு மாடியிலும் இரண்டு பொதுக் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அதாவது 12 பேர் மூன்று குளியல் அறைகளையும் மூன்று முதல் நான்கு பேர் கழிவறையையும் பகிர்ந்துகொள்வர்.
இதே வளாகத்திற்குள் துணி துவைப்பது, நடவடிக்கைகளுக்கான அறைகள், உணவருந்தும் இடங்களை வாடகைதாரர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
இந்தப் புதிய பாணி அமைப்பு, 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு ஒற்றையர் திட்டம்போல இருக்காது.
அதில் ஓரறை அல்லது ஈரறை வீவக வீடுகளை இரு ஒற்றையர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மாதிரி வீடு ஒன்றை நேற்று சுற்றிப்பார்த்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி உருவாக்குவதற்கு நேரம் தேவைப்படுவதால் முந்தைய தங்குவிடுதி தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார்.
"புதிதாக வசதிகளைச் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.
"ஏராளமான வளங்களும் தேவை. இதனால் ஏற்கெனவே உள்ள வீடுகளை மறுசீரமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
இந்த முன்னோடித் திட்டத்திலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "இது சரி வரலாம் அல்லது வராமல் போகலாம். உள்கட்டமைப்பு வசதி களில் சிறிய மாற்றங்கள் செய்தால் திட்டம் செயல்படலாம். இது, கற்றலுக்கான சிறந்த வழி," என்று கூறினார்.
குறைந்த வருமான ஒற்றையர் களுக்கான வாடகை விவரங்கள் இவ்வாண்டு இறுதியில் வெளியிடப்படும்.

