முதல் முறையாக ஆசியர் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது
உலகின் பெருமைமிகு அரங்கத்தில் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோனின் அறிமுகத்துடன் மேடையேறி, அதிர வைத்த 'நாட்டு நாட்டு' பாடலில் அனை வரும் மெய்மறந்து கரவொலி எழுப்பிய சிறிது நேரத்தில் இந்தியா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற அறிவிப்பு வெளி யானது.
சிறந்த அசல் பாடலுக்கான விருதை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை இசையமைப்பாளரான கீரவாணியும் பாடல் வரிகளை எழுதிய சந்திரபோசும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
மற்றொரு விருது, தமிழ்நாட்டில் படம் பிடிக்கப்பட்ட 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை தயாரிப்பாளர் குனித் மோங்காவும் இயக்குநர் கார்த்திகி கொன்சால் வெஸ்ஸும் பெற்றுக்கொண்டனர்.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது.
'நாட்டு நாட்டு' பாடல் பற்றி மேடையில் பேசிய தீபிகா படுகோன், முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாடல் ஆஸ்கர் விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியா இரண்டு விருதுகளை வென்ற தகவல் வெளியானதும் பிரதமர் மோடி, 'தனிச்சிறப்புமிக்கது' என்று பதிவிட்டார்.
"நாட்டு, நாட்டு பாடல் உலக முழுவதும் பிரபலமான பாடல். வரும் ஆண்டுகளிலும் அந்தப் பாடல் நினைவுகூரப்படும். இந்தப் பெருமையை வழங்கிய இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் குழுவினரைப் பாராட்டுகிறேன்," என்று டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருது வென்றவர்களையும் அவர் பாராட்டியிருந்தார்.
'த எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' குறும்படத்தைத் தயாரித்த குனித் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள். நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அவர்களது பணி அற்புதமாக எடுத்துக்காட்டுகிறது," என்று திரு மோடி குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலர் பாராட்டுகளை வெளியிட்டிருந்தனர்.
இதற்கிடையே சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை மலேசியரான மிஷல் இயோ வென்றார். இவ்விருதை பெறும் முதல் ஆசியர் இவர்.
'எவரிதிங் எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய 60 வயது மிஷல் இயோவுக்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உட்பட பலர் பாராட்டி வரு கின்றனர்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய ஏழு விருதுகளை ஆங்கிலப் படமான 'எவரிதிங் எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' வென்றுஉள்ளது.
இதற்கு முன்பு, 2009ஆம் ஆண்டில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான 'ஜெய்ஹோ' பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 'ஸ்லம் டாக் மில்லியனேர்' என்ற படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது.