உட்லண்ட்சில் உள்ள கார் நிறுத்துமிடம் ஒன்றில் நேற்று முன்தினம் நடந்துசென்ற மூவர்மீது வேன் மோதியதில் இரண்டு வயதுச் சிறுமி உயிரிழந்தார்.
கவனமின்றி வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்ததன் தொடர்பில் வேனை ஓட்டிய 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மாண்ட குழந்தையின் தந்தை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
புளோக் 326 உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32ல் நடந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் பிற்பகல் 2.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறுமி பின்னர் உயிரிழந்ததாகக் காவல்துறை கூறியது. விபத்தில் சிக்கிய நான்கு வயதுச் சிறுவனும் 34 வயதுப் பெண்ணும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இவ்விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.
விபத்தில் தொடர்புடைய நால்வரும் ஒரே குடும்பத்தினர் என்றும் விபத்து நிகழ்வதற்குச் சற்றுமுன் அவர்கள் அந்த புளோக்கில் உள்ள காப்பிக்கடையில் ஒன்றாக உணவருந்தினர் என்றும் சீன மொழி நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.
குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் இருந்த இரண்டு வயதுச் சிறுமி அதிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகவும் அந்நேரத்தில் பின்புறமாகச் செலுத்தப்பட்ட வேன் குழந்தைமீது மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட குடியிருப்பாளர்கள் சாவ்பாவ் நாளேட்டிடம் கூறினர்.

