தமிழ்மொழியின் 'அழகை'ப் போற்ற 42 நிகழ்ச்சிகள்
பொன்மணி உதயகுமார்
சிங்கப்பூர் தமிழர்கள் ஆங்கில மொழியை அதிகம் பயன்படுத்தினாலும் கலாசார, உணர்வுபூர்வமான தொடர்பை தமிழ் மொழியுடன் மட்டுமே கொண்டிருப்பதாக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியில், வேலையில், சமூக ஊடகத்தில் ஆங்கிலம் வழக்கமொழியாக இருக்க, உலகமயமாதல் ஆங்கிலப் புழக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
வாழ்க்கைத் தொழிலில் முன்னேறுவதற்கும் ஆங்கிலம் தேவைப்படுவதை தேசிய அளவில் காணலாம் என்றார் அவர்.
இதற்கேற்ப இந்தியர்களில் 59.2 விழுக்காட்டினர் வீட்டில் அதிகமாக ஆங்கிலம் பேசுவதாக 2020இல் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு இந்த விகிதம் 41.6ஆக இருந்தது. தமிழை வாழும் மொழியாக வைத்திருப்பதில் சவால்கள் இருந்தாலும் தமிழ்மொழி என்றும் செழிக்கும் என்ற நம்பிக்கையை வளர்தமிழ் இயக்கம் கொண்டு உள்ளதாகத் திரு மனோகரன் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் தமிழ்மொழி விழா 2023, முற்றிலுமாக நேரடி வருகையாளர்களுடன் நடைபெற உள்ளது. 'அழகு' என்பது இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் கருப்பொருள்.
பொது வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தக் கருப்பொருள் நிர்ணயிக்கப்பட்டதாக வளர்தமிழ் இயக்கம் கூறியது.
'தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்' என்ற குறிக்கோளை ஒட்டி இவ்வாண்டு 43 பங்காளி அமைப்புகள் 42 நிகழ்ச்சிகளைப் படைக்க உள்ளன. இலக்கியம், கலை, கலாசாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைபெறும் ஒரு மாத விழாவில் இடம்பெறவிருக்கின்றன.
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் தமிழ்மொழிமீது கொண்டுள்ள ஆர்வம், பயன்பாட்டில் கொண்டுள்ள தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர்ச் சூழலுக்குப் பொருந்தும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை வளர்தமிழ் இயக்கம் தயாரிக்க உள்ளது. இதையடுத்து தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் எழுதும் போட்டியும் இவ்வாண்டு நடைபெறும்.
மேலும், தமிழ்முரசு உட்பட மூன்று புதிய பங்காளி அமைப்புகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் இவ்வாண்டு இணைந்துள்ளன. தமிழ்முரசு, உயர்கல்வி மாணவர்களுக்காக மொழிபெயர்ப்புப் பயிலரங்கையும் செய்தியறைச் சுற்றுலாவையும் நடத்த உள்ளது.
அனைத்துத் தரப்பினர்க்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வளர்தமிழ் இயக்க உறுப்பினர் எஸ்என்வி நாராயணன் கூறினார். இளையர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், இவ்வாண்டு ஏறத்தாழ 67 விழுக்காட்டு நடவடிக்கைகள் இளையர்களுக்காக அல்லது இளையர்களால் நடத்தப்பட உள்ளன என்றார்.
இளையர்களிடம் தமிழ்மொழிக் கூறுகளை எளிதில் கொண்டுசெல்ல உதவும் 'அழகு', 'அன்பு' எனும் இரண்டு புதிய உருவச் சின்னங்கள் தொடக்க நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தப்படும் என்று இயக்கத்தின் மற்றோர் உறுப்பினர் கார்த்திகேயன் சோமசுந்தரம் கூறினார்.
தமிழ்மொழி விழாவின் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்ச்சி ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 9 மணிக்கு மீடியாகார்ப் அரங்கத்தில் இடம்பெறும். வசந்தம் ஒளிவழியிலும் 'மீவாட்ச்' ஊடகத்தளத்திலும் அது நேரடியாக ஒளிபரப்பாகும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நுழைவுச்சீட்டுகளை இம்மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 'பீடிக்ஸ்' தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

