கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளைப் பெரிய அளவில் தளர்த்த சீனா முடிவெடுத்துள்ளது.
இன்று முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு மீண்டும் விசாக்கள் வழங்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் படிப்படியாக அதன் 'கொவிட் அறவே அற்ற' கொள்கையைத் தளர்த்தி வருவதன் ஓர் அங்கமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
புதிய விசா விண்ணப்பங்களை மறுஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும் வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்ட விசாக்கள் இன்னும் காலாவதி ஆகாமல் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தி சீனா செல்லலாம் என்று கூறப்பட்டது.
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அமைந்திருக்கும் சீனத் தூதரகங்களின் இணையத்தளங்களிலும் இதுபற்றித் தகவல் இடம்பெற்றுள்ளது.
சொகுசுக் கப்பல்கள் மூலம் ஷங்காய் செல்வோருக்கும் ஹாங்காங், மக்காவ், ஆசியான் நாடுகள் சில ஆகியவற்றில் இருந்து வருவோர்க்கு விசா தேவையில்லை என்ற நடைமுறையும் மீண்டும் நடப்புக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
கிருமிப் பரவலை முன்னிட்டு எல்லைகளை மூடிய சீனா, இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து வருவோர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தது.
இருப்பினும் விசா கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சீனாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததை முன்னிட்டு ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் சீனப் பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கவே, பதிலடியாக சீனாவும் அவ்விரு நாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதித்தது.
கொவிட்-19 கிருமிப் பரவல் நிலைமை மேம்படவே கட்டுப்பாடுகள் இருதரப்பிலும் தளர்த்தப்பட்டு இப்போது பயணிகளுக்கு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் அமைந்துள்ள சீனத் தூதரகத்தின் அறிவிப்புகள்
இவ்வேளையில், சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகம் வெளி நாட்டினருக்கு இன்று முதல் அனைத்துவிதமான விசாக்களையும் மீண்டும் வழங்குகிறது.
சுற்றுப்பயண விசா, மருத்துவ சிகிச்சைக்கான விசா போன்றவையும் இவற்றில் அடங்கும்.
தூதரகம் நேற்று முன்தினம் பின்னேரத்தில் அதன் இணையத்தளத்தில் இதுகுறித்து அறிவித்தது.
2020 மார்ச் மாதம் வெளி நாட்டினருக்கு விசா வழங்குவதைச் சீனா நிறுத்தியபோது சிங்கப்பூரர்கள் விசா எடுக்கத் தேவையின்றி 15 நாள் பயணம் மேற்கொள்ளலாம் என்ற ஏற்பாடும் நிறுத்தப்பட்டது.
அது மீண்டும் நடப்புக்கு வருகிறதா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கூடுதல் தகவல்களுக்கு சிங்கப்பூரில் செயல்படும் சீனத் தூதரகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள பயண முகவர்கள் கூடுதலானோர் சீனப் பயணத்துக்குத் திட்டமிடுவர் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே சீனாவிற்கு சுற்றுப்பயணம் செல்வதற்காகத் தொடர்புகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதன் தொடர்பில் வெளியாகும் அறிவிப்புகளை அணுக்கமாகக் கண்காணித்து அதற்கேற்ப பயணத் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சுற்றுப் பயண முகவர்கள் கூறினர்.

