கடைக்காரர்கள் இனி தங்கள் 'நெட்ஸ்' சாதனத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 'விசா', 'மாஸ்டர்கார்டு' ஆகிய அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வர்.
இதன் தொடர்பில் 'நெட்ஸ்' நிறுவனம் அந்த இரு கடன்பற்று அட்டை வழங்கும் கட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்தப் புதிய வசதி, வணிகர்களுக்குப் பெரிதும் உதவும் என்று 'நெட்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.
கட்டணங்களைப் பெறுவதற்குத் தனித்தனியே இந்த மூன்று நிறுவனங்களையும் நாடுவதற்குப் பதிலாக ஒரே சேவையின்கீழ் மூன்று வகையான கட்டணம் செலுத்தும் முறைகளும் இணைக்கப்படுவதை அது சுட்டியது.
ஏற்கெனவே, 'மைடெபிட்' அட்டை, 'ருபே' அட்டை, 'வீசேட் பே' செயலி, 'பிராம்ப்ட்பே', 'அலிபே+' போன்றவற்றைப் பயன்படுத்தி 'நெட்ஸ்' சாதனம் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த இயலும்.
'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்', 'யூனியன்பே' போன்றவற்றோடும் 'நெட்ஸ்' ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளது.
$1 மில்லியனுக்குக் குறைவான வருவாய் ஈட்டும் சிறிய நிறுவனங்கள் அவற்றின் 'நெட்ஸ்' சாதனத்துடன் 'விசா', 'மாஸ்டர்கார்டு' ஆகிய அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையைக் கடைப்பிடித்தால் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வெவ்வேறு கட்டணமுறைகளை நிர்வகிப்பதில் நேரம் செலவிடாமல், ஒருங்கிணைக்கப்பட்ட கட்டணமுறையைப் பின்பற்றுவதால் வர்த்தகர்கள் தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தக் கூடுதல் நேரத்தை ஒதுக்க முடியும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும் சில வர்த்தகர்கள் இந்தக் கட்டணமுறையைக் காட்டிலும் 'கியூஆர்' குறியீட்டின்வழி கட்டணம் செலுத்தினால் பணம் உடனடியாகத் தங்களுக்குக் கிடைத்துவிடும் என்கின்றனர். 'நெட்ஸ்' முறையின்கீழ் தங்கள் கணக்கிற்குப் பணம் வந்துசேரக் கூடுதல் நேரம் பிடிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கைப்பேசிகளை வைத்துள்ளனர். அவர்கள் கடன்பற்று அட்டையை பணப்பையிலிருந்து வெளியே எடுத்து கட்டணம் செலுத்துவதைக் காட்டிலும் 'கியூஆர்' குறியீட்டைப் பயன்படுத்திப் பணம் செலுத்துவது எளிது என்று கருதுவர் என்றனர் இந்த வர்த்தகர்கள்.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் சிலர் இந்தக் கட்டணமுறையை வரவேற்கின்றனர். கடன்பற்று அட்டை மூலம் பணம் செலுத்துவதால் தங்களுக்கு சலுகைப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை அவர்கள் குறிப்பிட்டனர். வங்கிச் செயலியைப் பயன்படுத்தி 'பேநவ்' முறையில் பணம் செலுத்துவதைவிடவும் கடன்பற்று அட்டையை சாதனத்தில் காட்டி பணம் செலுத்துவது எளிது என்பது இத்தகையோர் கருத்து.
ஏற்கெனவே 'நெட்ஸ்' சாதனத்தைப் பயன்படுத்திவரும் வர்த்தகர்கள் உடனடியாக 'விசா', 'மாஸ்டர்கார்டு' ஆகியவற்றை அவற்றுடன் இணைத்துக்கொள்ளலாம். சாதனத்தில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என்று கூறப்பட்டது.
வாடிக்கையாளர்கள் மின்னிலக்கக் கட்டணமுறையைப் பெரிதும் விரும்புவதை 'விசா' நிறுவனம் சுட்டியது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கூடுதலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க இந்தப் புதிய முறை கைகொடுக்கும் என்று 'மாஸ்டர்கார்டு' நிறுவனம் கூறியது.

