எண்ணெய் சாராப் பொருள் ஏற்றுமதி 15.6% குறைவு

எண்ணெய் சாராப் பொருள் ஏற்றுமதி 15.6% குறைவு

3 mins read

சிங்கப்பூரின் சென்ற மாத ஏற்றுமதி தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிந்தது

சிங்­கப்­பூ­ரின் சென்ற மாத எண்­ணெய் சாரா உள்­நாட்டு உற்­பத்­திப் பொருள்­கள் ஏற்­று­மதி ஆண்டு அடிப்­ப­டை­யில் 15.6 விழுக்­காடு குறைந்­தது. தொடர்ந்து ஐந்­தா­வது மாத­மாக ஏற்­று­மதி சரிந்­துள்­ளது.

சென்ற மாதம் மின்­ன­ணுப் பொருள்­கள், மின்­னணு சாராப் பொருள்­கள் என இரு பிரி­வு­க­ளி­லும் ஏற்­று­மதி குறைந்­தது.

கடந்த ஜன­வரி மாதம் சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­மதி 25 விழுக்­காடு வீழ்ச்சி கண்­டது.

'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு நேற்று இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்­திற்­குப் பிறகு எண்­ணெய் சாரா உள்­நாட்டு உற்­பத்­திப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி மிக­வும் குறைந்­தி­ருப்­பதை வல்­லு­நர்­கள் சுட்­டி­னர்.

மாத அடிப்­ப­டை­யில், எண்­ணெய் சாராப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி எட்டு விழுக்­காடு குறைந்து $13.3 பில்­லி­யன் ஆனது. புளூம்­பெர்க் நிறு­வன ஆய்­வா­ளர்­க­ளின் முன்­னு­ரைப்­பை­வி­ட­வும் அது அதி­கம்.

ஜன­வரி மாதம் எண்­ணெய் சாராப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி 0.9 விழுக்­காடு வளர்ச்சி கண்­டி­ருந்­தது.

மின்­ன­ணுப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி சென்ற மாதம் 26.5 விழுக்­காடு குறைந்­தது.

ஒப்­பு­நோக்க, அதற்கு முந்­தைய மாதம் அது 26.8 விழுக்­கா­டாக இருந்­தது.

உல­க­ளா­விய நிலை­யில் பொரு­ளி­யல் வளர்ச்சி தொடர்ந்து குறை­வா­கவே இருப்­ப­தால் மின்­ன­ணுப் பொருள்­க­ளின் ஏற்­று­ம­தி­யும் குறை­வா­கவே இருக்­கும் என்­கின்­ற­னர் வல்­லு­நர்­கள்.

தென்­கொ­ரியா, தைவான் போன்­ற­வற்­றி­லும் இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்து கணி­னிச் சில்லு ஏற்­று­மதி குறைந்­தி­ருப்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

சிங்கப்பூரின் மின்­னணு சாராப் பொருள்­களின் ஏற்­று­மதி சென்ற மாதம் 12.1 விழுக்­காடு குறைந்­தது. ஒப்­பு­நோக்க, இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் அது 24.5 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­ம­திப் பட்­டி­ய­லில் முன்­னிலை வகிக்­கும் 10 சந்­தை­க­ளுக்­கும் சென்ற மாதம் ஏற்­று­மதி குறைந்­த­தா­க­த் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஹாங்­காங், தைவான் ஆகிய சந்­தை­க­ளுக்­கான ஏற்­று­மதி ஈரி­லக்க வீழ்ச்சி கண்­டது.

கடந்த ஜன­வரி மாதம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்­கான ஏற்­று­மதி அதி­க­ரித்­தது.

ஆனால் சென்ற மாதம் அது ஆண்டு அடிப்­ப­டை­யில் 34.2 விழுக்­காடு குறைந்­தது.

மருந்­துப் பொருள்­கள், பெட்­ரோ­லி­யப் பொருள்­கள் போன்­ற­வற்­றின் ஏற்­று­மதி குறைந்­தது இதற்­குக் கார­ணம்.

ஆசி­யான் வட்­டார நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­த­கம் சென்ற மாதம் சற்றே மேம்­பட்­டது. தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா, மலே­சியா போன்ற நாடு­க­ளு­ட­னான வர்த்­த­கம் மீட்சி கண்­டது.

சீனா­விற்­கான ஏற்­று­மதி குறை­வா­கவே இருந்­தா­லும் ஜன­வரி மாத அள­விற்கு மோச­மில்லை என்று கூறப்­பட்­டது.

சென்ற மாதம் சீனா­விற்­கான ஏற்­று­மதி 11.3 விழுக்­காடு குறைந்­தது. ஜன­வரி மாதம் அது 41.1 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது. அமெ­ரிக்­கா­விற்­கான ஏற்­று­மதி சென்ற மாதம் 8.7 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

இந்த ஆண்­டின் முதற்­பா­தி­யில் ஏற்­று­மதி குறை­வா­கவே இருக்­கும் என்று வல்­லு­நர்­கள் முன்­னு­ரைத்­துள்­ள­னர்.

ஏற்­று­மதி, நான்கு விழுக்­காடு முதல் ஏழு விழுக்­காடு வரை குறை­யக்­கூ­டும் என்­பது அவர்­கள் முன்­னு­ரைப்பு. நாண­யக் கொள்கை மேலும் கடு­மை­யாக்­கப்­ப­டல், பொரு­ளி­யல் மந்­த­நிலை குறித்த கவலை போன்ற அம்­சங்­க­ளால் சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­மதி குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.