விடைபெற்றார் சிங்கப்பூரின் நவரச நாயகன்

ரச்சனா வேலாயுதம்

 

சிங்கப்பூர்த் தமிழ் வானொலி, மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முத்திரை பதித்த திரு ரெ.சோமசுந்தரம் வெள்ளிக்கிழமை (17-03-2023) மாலை 5.15 மணியளாவில் கூ டெக் புவாட் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 75. 

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏராளமான நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார் இவர்.

“தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் மக்களிடம் கொண்டுசெல்வதில் என் தந்தை தீவிரமாகச் செயல்பட்டார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். வேலை இருந்தாலும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட முயற்சி செய்வார். அப்பாவின் மறைவு எங்கள் குடும்பத்திற்கும் கலையுலகத்திற்கும் பேரிழப்பு,” என்றார் இவரது இளைய மகன் கார்த்திகேயன் சோமசுந்தரம். 

1979ல் முழுநேர வானொலித் தொகுப்பாளராகப் பணியைத் தொடங்கிய திரு ரெ.சோ. தமது மொழிவளத்தாலும் காந்தக் குரலாலும் குறுகிய காலத்தில் மக்களின் மனங்களைக் கவர்ந்தார்.  

கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரலை மாற்றிப் பேசும் திறன்கொண்ட இவர், வானொலியில் ஒலிபரப்பப்பட்ட 64 அத்தியாயங்கள் கொண்ட மகாபாரதம் தொடரில் துரியோதனன் கதாபாத்திரத்துக்கு மெருகூட்டினார். 

நல்லதோர் வீணை, ரகசியம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்தார். 2007ஆம் ஆண்டு பிரதான விழாவில் சிறந்த நடிகருக்கான விருதையும் 2016ல் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இவர் வென்றார். 

தொடர்ந்து 14 ஆண்டுகளாக இவர் தேசிய தின அணிவகுப்பின்போது தமிழில் விளக்கவுரை ஆற்றினார். வானொலியில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் தமிழ்ச் சமுதாயத்திற்கு இவர் தொடர்ந்து பங்களித்தார். 

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர், தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர், சிங்கப்பூரில் தமிழ் தழைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். 

சிறுவயதில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த இவர், பல சவால்களைக் கடந்து கலை உலகில் நட்சத்திரமாய் மின்னினார். இவரது வாழ்க்கைக் கதையை 2021ல் ‘ரெ சோமா’ எனும் நாடகமாக எஸ்பிளனேட் அரங்கில் படைத்தது ‘அகம் தியேட்டர் லேப்’. 

“சிங்கப்பூர் நாடகத்துறைக்குக்  கிடைத்த பொக்கிஷம் திரு சோமசுந்தரம். மேடை நாடகக் கலைக்கு உயிரூட்டியவர்களில் அவரும் ஒருவர். நான் இயக்கிய நகைச்சுவை நாடகத்தில் அவரை அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தது மறக்க முடியாத அனுபவம்,” என்றார்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரும் வானொலிக் கலைஞருமான திரு பி.கிரு‌ஷ்ணன், 91. 

“அப்போதைய தமிழ் வானொலியான ஒலிவழி நான்கில் சேர்ந்தபோது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு ரெ. சோ.  மிகவும் இனிமையானவர். நானும் அவரும் இணைந்து நேரடிக் காற்பந்தாட்ட வர்ணனைகள் செய்துள்ளோம். இராமாயணம் வானொலி நாடகத்தில் இராவணனாக அவரும் அனுமனா  நானும் நடித்ததை மறக்க முடியாது,” என்கிறார் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி.

“அவர் குரலில் உக்கிரமும் இருக்கும், சாந்தமும் நிலவும். நடிப்பில் கம்பீரமும் கனிவும் இருக்கும்,” என்று உள்ளூர்க் கலைஞர் ச. வடிவழகன் புகழாரம் சூட்டினார். 

“தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் எங்களிடம் பேசுவார்,” என்றார் தொலைக்காட்சிக் கலைஞர் வர்மன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!