நீடித்த நிலைத்தன்மை உடைய தண்ணீர் விநியோகம் குறித்து துணைப் பிரதமர் வோங்
உலகம் தண்ணீருக்கான நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையில், விலைமதிப்பில்லா பொக்கிஷம் போன்ற தூய்மையான, நன்னீரை சிங்கப்பூரர்கள் எளிதாகக் கருதக்கூடாது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
மரினா அணைக்கட்டில் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் உலகத் தண்ணீர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். பொதுப் பயனீட்டுக் கழகம் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, மூத்த துணையமைச்சர் ஏமி கோர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திரு வோங் தமது உரையில், "போதிய தண்ணீர் கிடைக்காமல் உலகெங்கும் பில்லியன் கணக்கானோர் தவிக்கின்றனர். ஆசியாவை மட்டும் எடுத்துக்கொண்டாலும் பல மில்லியன் பேருக்கு இன்னும் தூய்மையான நீரோ, குடிநீரோ கிடைப்பதில்லை," என்று குறிப்பிட்டார்.
"நிலைமை மேலும் மோசம் அடையக்கூடும். ஏனெனில் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நிலையில் நன்னீருக்கான தேவை அதன் விநியோக அளவைக் காட்டிலும் 40 விழுக்காடு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். மிக அதிகமான பயன்பாடு, முறையற்ற நீர் நிர்வாகம் ஆகியவை இதற்குக் காரணங்கள்," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் தண்ணீர் விநியோகம் கடந்த பல ஆண்டுகளில் மேம்பட்டிருந்தாலும் எதிர்காலத் தேவைக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்ய, கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மக்கள்தொகை அதிகரிப்பு, பொருளியல் தேவைகள் ஆகியவற்றால் அடுத்த 30 ஆண்டுகளில் சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவை இரு மடங்காகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் திரு வோங் சுட்டினார்.
"இதற்கிடையே பருவநிலை மாற்றத்தால் உலகெங்கும் வானிலை கணிக்க இயலாத நிலையில் உள்ளது. சிங்கப்பூரிலும் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்கிறது. அதேபோல் அடிக்கடி பல நாள் மழை இல்லாமலும் இருக்கிறது.
"எனவே, தொடர்ந்து முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம். உரிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டும். நீடித்த நிலைத்தன்மை முறையில் நாட்டின் தண்ணீர் விநியோகத்தைப் பெற உதவும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது முக்கியம்," என்றார் திரு வோங்.
1950கள், 1960களில் நிலவிய வாழ்க்கைமுறை பற்றித் தமது தாயார் கூறியதை அவர் நினைவுகூர்ந்தார். 1963ல் வறட்சி நிலவியபோது, 10 மாதங்களுக்கு தண்ணீர்ப் பங்கீட்டு முறை அமலில் இருந்ததையும் வாரத்தில் மூன்று நாள்களுக்கு கிட்டத்தட்ட ஒரு நாளின் பாதி நேரம் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
"வர்த்தகங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் அவரவர் பங்கை ஆற்றுவது முக்கியம். சிங்கப்பூரின் இன்றைய நிலைக்கு கூட்டு முயற்சிகளே முக்கியப் பங்காற்றின," என்றார் அவர்.
"நாட்டின் வளர்ச்சிக்கும் தண்ணீர் பாதுகாப்பிலும் இத்தகைய ஒத்துழைப்பு தொடரவேண்டும். சவால்களைக் கடந்து நடைபோட அது முக்கியம்," என்றார் அவர்.

