அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்குக் (படம்) கைதாணை பிறப்பித்துள்ளது.
அவர் போர்க்குற்றம் புரிந்ததாகக் கூறி நேற்று முன்தினம் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
இதன்கீழ் அனைத்துலக நீதிமன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள உலகின் 123 நாடுகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திரு புட்டின் எங்கு சென்றாலும் அவரைக் கைது செய்து, விசாரணைக்காக, 'த ஹேக்' அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப இயலும்.
உக்ரேனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக ரஷ்யாவிற்குக் கொண்டுசென்றதாகத் திரு புட்டின்மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரேனியப் படையெடுப்பில் ரஷ்யப் படைகள் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டதாகக் குறைகூறல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மாஸ்கோ அதனைத் தொடர்ந்து மறுத்துவருகிறது.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைதாணை செல்லாது என்கிறது ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின்.
ரஷ்யா, உக்ரேன் இரண்டுமே அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பியம் வகிக்கவில்லை. இருப்பினும் தனது எல்லைக்குள் நடைபெற்ற குற்றச்செயல்களுக்குத் தீர்ப்பு வழங்கும் உரிமையை உக்ரேன் அந்த நீதிமன்றத்திற்கு வழங்கி உள்ளது.
அனைத்துலக நீதிமன்றத்திற்குச் சொந்தமாகக் காவல்படைப் பிரிவு ஏதுமில்லை. எனவே குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுவோரைத் தடுத்து வைக்கவும் விசாரணைக்குக் கொண்டுவரவும் உறுப்பியம் வகிக்கும் நாடுகளையே அது சார்ந்துள்ளது.
திரு புட்டின் தாமாக முன்வந்து விசாரணைக்குச் செல்லமாட்டார் என்பதால், உறுப்பிய நாடுகளுக்குச் சென்றால் அவரைக் கைது செய்யும் அதிகாரத்தை இந்தக் கைதாணை வழங்குகிறது.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கேள்விகள் சினமூட்டுபவை என்றும் அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
அமெரிக்காவின் முன்னைய அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் போர்க் குற்ற விவகாரங்களுக்கான பொதுத் தூதராகச் செயல்பட்ட ஸ்டீஃபன் ராப், "இந்தக் கைதாணை மூலம் புட்டின் சமூகத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவராகக் கருதப்படுவார். அவர் பயணம் மேற்கொண்டால் கைது செய்யப்படுவார். இந்த விவகாரம் தீர்க்கப்படாமல் ரஷ்யா அதன்மீது விதிக்கப்பட்ட பொருளியல் தடைகளில் இருந்து நிவாரணம் பெற இயலாது," என்று கூறினார்.
பதவியில் இருக்கும் அதிபர் ஒருவருக்கு இவ்வாறு கைதாணை பிறப்பிக்கப்படுவது இது மூன்றாவது முறை. இதற்கு முன்னர் சூடானிய அதிபர் ஒமார் அல்-பஷீர், லிபியாவின் அதிபர் முஅம்மர் அல்கடாஃபி ஆகிய இருவருக்கும் இத்தகைய கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வேளையில், திரு புட்டினுக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டதை உக்ரேன், வரவேற்றுள்ளது. நீதியின் சக்கரம் செயலற்று நின்றுவிடவில்லை; இன்னும் சுழல்கிறது என்பதை இந்தத் துணிச்சலான முடிவு காட்டுகிறது என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
ஏறக்குறைய 16,000 குழந்தைகளை மாஸ்கோ சட்டவிரோதமாகக் கவர்ந்து சென்றிருப்பதாகக் கூறுகிறது கியவ்.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரிம் கான் கடந்த ஓராண்டாக உக்ரேனில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலை நடவடிக்கைகள் நடைபெற்றனவா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
உக்ரேனுக்கு நான்கு முறை பயணம் செய்த அவர், சிறாருக்கு எதிரான குற்றங்கள், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றில் தாம் கவனம் செலுத்தியதாகக் குறிப்பிட்டார்.

