பங்ளாதேஷில் நேற்றுக் காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தலைநகர் டாக்காவின் தெற்கே உள்ள மதரிபூர் மாவட்டத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது.
புதிதாகக் கட்டப்பட்ட ஆற்றுப்பால விரைவுச்சாலை தரைமட்டத்திலிருந்து ஏறக்
குறைய 30 அடி உயரத்தில் உள்ளது. உள்ளூர் நேரம் காலை 7.30 மணியளவில் அந்த விரைவுச்சாலையில் சென்றுகொண்டு இருந்த தனியார் பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்
தடுப்பை உடைத்துக்கொண்டு 30 உயரத்திலிருந்து பள்ளத்தில் விழுந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.
காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் 17 பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் அந்த எண்ணிக்கை அதிகரித்தது.
"மரண எண்ணிக்கை 19க்கு அதிகரித்துவிட்டது. இன்னும் 12 பேர் உயிருக்குப் போராடுவதால் இந்த எண்ணிக்கை உயரக்
கூடும் என்று அஞ்சுகிறோம்," என உள்ளூர் காவல்துறை தலைமை அதிகாரி மசூத் ஆலம், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சாலைகளும் வாகனங்களும் பழையனவாகவும் சரிவரப் பராமரிக்கப்படாதவையாகவும் உள்ளதாலும் முறையான பயிற்சி பெறாத ஓட்டுநர்களாலும் பங்ளாதேஷில் ஏராளமான சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

