அதிமுகவுக்கு பாஜகவுக்கும் இடையில் அண்மைக்காலமாக உரசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்
படத்தை பாஜகவினரும் அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினரும் எரிக்கும் அளவுக்கு பகை பெரிதானது. 'ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு' என பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.
அதன் பிறகு தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கூட்டணிக்கட்சியான அதிமுக பற்றி விமர்சிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது நட
வடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை அமைந்தகரையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பாஜக தனித்துச் செயல்பட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பணிகள் முடிந்த பின்னர் மே 10ஆம் தேதி முதல் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவேன்.
"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவெடுத்தால் தலைவர் பதவியைவிட்டு விலகுவேன். சாதாரணத் தொண்டனாகவே கட்சிப் பணியாற்றுவேன்," என்று பேசியதாகத் தகவல் வெளியானது.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரும், "அதிமுகவினர் நம்மைவிட்டு விலகுவதற்கான எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க உடனான கூட்டணிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கும் நேரத்தில் இருக்கிறோம்," என்று கூறியதாகத் தெரிகிறது
இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதிமுக-பாஜக கூட்டணி உடைந்துவிடுமா என்று பல்வேறு ஊகங்கள் எழும்பின.
அந்த ஊகங்களுக்கு இருதரப்பில் இருந்தும் பதில் கூறப்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், "அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை பொதுவெளியில் பேசவில்லை. பேசட்டும், பதில் சொல்கிறேன்," என்று தெரிவித்து இருந்தார்.
பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், "கூட்டணி பற்றி அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்," என்று கூறினார்.
டெல்லியிருந்து நேற்று மதுரை வந்திறங்கிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் இதே கருத்தைக் கூறினார். "அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநிலத் தலைவரோ நிர்வாகிகளோ அல்ல. பாஜகவின் நாடாளுமன்றக் குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும்," என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அண்ணாமலை எரிமலையாக வெடித்ததற்கு சில காரணங்கள் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி.
ஆனால், அந்தப் பதவிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேவைப்படும். ஒருவரை கட்சியின் தலைவராக அங்கீ
கரிப்பதற்கென தனியாக விதி
முறைகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கைகூட அதிமுகவுக்கு டெல்லி அதிகார மட்டத்தின் தயவு தேவை. இப்படிப்பட்ட நிலையில் பாஜக நிர்வாகிகளுக்கு அதிமுக தூண்டில் போடும் விவகாரமே அண்ணாமலைக்கு வெறுப்பேற்றியது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் அதே நாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் அண்ணாமலை. உரசல் முற்றுமா அல்லது முடிந்துவிடுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் என்று அரசியல் விமர்
சகர்கள் கூறுகிறார்கள்.
