நீதிமன்றம் சார்ந்த நடவடிக்கைகளின்போது பொய்யுரைத்ததற்காகக் காவல்துறை விசாரணையைத் தொடங்கிய பிறகு திரு லீ சியன் யாங்கும் திருவாட்டி லீ சுவெட் ஃபெர்னும் தலைமறைவாகிவிட்டனர் என்றும் பொதுநலன் கருதியே அவ்விவகாரம் குறித்த தகவலைக் காவல்துறை வெளியிட்டது என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தம்பதியர் பொய்யுரைத்ததை நீதிமன்றமும் ஒழுங்குமுறை தீர்ப்பாயமும் கண்டுபிடித்தன என்பதால் இது பொதுப் பதிவேடு குறித்த விவகாரமும் ஆகும் என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
காவல்துறை விசாரணை குறித்த தகவல் ஏன் வெளியிடப்பட்டது என்றும் மார்ச் 3ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஏன் அத்தம்பதியரின் பெயரைக் குறிப்பிட்டார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.
அவற்றுக்கு இன்று திங்கட்கிழமை திரு சண்முகம் இவ்வாறு விளக்கமளித்தார்.

