சமய சிறுபான்மையினர், எதிர்ப்பாளர்கள், செய்தியாளர்கள் போன்றோரைக் குறிவைக்கும் வகையில் இந்தியாவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நடந்துள்ளதாக அமெரிக்காவின் வருடாந்திர அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான நடைமுறைகள் குறித்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஒருசில அரசாங்கத்துறை, காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளால் அந்நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அமெரிக்கா கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதை அடுத்து ஓராண்டு காலத்திற்குப் பின் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய அரசாங்கம் அல்லது அந்நாட்டின் அதிகாரிகள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் அல்லது சித்திரவதை செய்தல், இழிவுபடுத்தும் தண்டனைகள் தருதல் தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டில் செய்தியாளர்கள் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் தடுப்புக்காவல் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை சம்பவங்களும் அடங்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளதாக அறியப்படுகிறது.
இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் தான் வகுத்துள்ள கொள்கைகள் அனைத்தும் வெவ்வேறு சமூகங்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் நெருக்கமான பொருளியல் உறவு, வட்டாரத்தில் சீனாவை எதிர்க்க அமெரிக்காவுக்கு இந்தியாவின் அதிகரிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு மத்தியில் இவ்வாறு இந்தியாவை அமெரிக்கா சாடியுள்ளது அரிதான ஒன்றே.
ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா, மியன்மார் போன்ற நாடுகளில் பெரும் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

