இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் காணாத நெருக்கடி நிலையைத் தற்போது சந்தித்துவர, நாட்டை மீட்டெடுக்கும் வகையில் $3 பில்லியன் அமெரிக்க டாலரை (S$4 பி.) அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்) வழங்க அதன் நிர்வாகச் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்தமாக $7 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
ஐஎம்எஃப் எடுத்துள்ள இந்த முடிவினால் இலங்கை உடனடியாக கிட்டத்தட்ட $333 மில்லியனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இதர பங்காளிகளிடமிருந்து நிதி ஆதரவு விரைவில் வரத் தொடங்கும் என்றும் ஐஎம்எஃப் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜியோர்ஜீவா கூறினார்.
அனைத்துலக முதலீட்டுச் சந்தைகளில் இலங்கையின் தரநிலையை மேம்படுத்த ஐஎம்எஃப் திட்டம் கைகொடுக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்வழி முதலீட்டாளர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்க்க முடியும் என்று கூறப்பட்டது. இலங்கையின் பொருளியல் மேம்படும் அறிகுறிகள் தெரிவதாக திரு விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் முன்னதாகக் கூறியிருந்தார். கடன் மறுசீரமைப்பு உத்திமுறை குறித்து இலங்கை அடுத்த மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.