என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் நமக்கு கைகொடுக்காமல் போகலாம் என்பதால் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை முக்கியமான ஒன்றாக நாம் கருதவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
ஜூரோங் தீவில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான பயிற்சியை அவர் பார்வையிட்டார். பேரளவிலான நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்க அமைப்புகள் தயார்நிலையில் இருப்பதைக் காட்டும் அந்தப் பயிற்சி 'எக்சர்சைஸ் நார்த்ஸ்டார் XI' என்னும் பெயரில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய பிரதமர், "பயங்கரவாதக் குழுக்கள் உல கெங்கும் உள்ளன. அவர்களின் கண்காணிப்பில் சிங்கப்பூரும் உள்ளது. அதனால்தான் வெவ்வேறு விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறனை சிங்கப்பூர் பெறுவதோடு அத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி தரவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
"அச்சுறுத்தல்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல்போனால் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கும். மேலும், அதனால் நமது சமூகம் உடைந்துபோகும் வாய்ப்பு உள்ளது.
"பயங்கரவாதத்தையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் கடுமையானவையாக சிங்கப்பூர் கருதுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
"சில சமயங்களில் தவறாக வழிநடத்தப்பட்ட, சுயமாக தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு ஆளானோர் இங்கும் இருப்பதை அறிந்திருக்கிறோம்.
"இருப்பினும் கடினமாக முயன்று, எந்த ஒரு தீங்கான செயலிலும் ஈடுபடும் முன்னர் அவர்களை நாம் பிடித்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், என்றாவது ஒருநாள் நமக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்காமல் போகலாம். எனவேதான் இதுபோன்ற பயிற்சிகளுக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும்," என்றார் திரு லீ.
அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் காவற்படை, சிங்கப்பூர் ஆயுதப் படை போன்றவை அந்த அமைப்புகளுள் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
1997ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட 'நார்த்ஸ்டார்' பயிற்சியின் 11வது நிகழ்வு இது.
மூன்று மணி நேரம் நடைபெற்ற பயிற்சியை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பார்வையிட்டனர்.

